இப்படிக்கு இவர்கள்

வலிமையான ஆசிரியர்கள் தேவை

செய்திப்பிரிவு

ஆசிரியரை வெறும் எழுத்துத் தேர்வு மட்டும் வைத்துத் தேர்வு செய்வது சரியா? தினந்தோறும் அவர் கற்பித்தல் பணியைச் செய்யப்போகிறார்.

அவருடைய கற்பித்தலை எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் வெறும் எழுத்துத் தேர்வை மட்டுமே வைத்து பணிக்கு அரசு தேர்ந்தெடுக்கிறது. ஒரு சமையல்காரரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் சமையலைச் சாப்பிட்டுவிட்டுதான் அவரைத் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால், ஆசிரியர் பணிக்கு அவ்வாறு ஏன் செய்வதில்லை?

அனைத்தும் கற்றறிந்த சான்றோர் கூட்டம் சம்பளத்தைத் தவிர, வேறு எதற்காகவும் குரல் உயர்த்தவோ, போராடவோ தயாராக இல்லை. அந்தச் சம்பளத்துக்காகக்கூடத் தனியார் பள்ளி ஆசிரியர்கள் குரல் உயர்த்த சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள்.

கொள்கையற்ற ஆசிரியர்கள், துணிவில்லாத ஆசிரியர்கள், புரட்சியைப் போதிக்காத ஆசிரியர்கள், மாற்றங்களை ஏற்காத ஆசிரியர்கள் மோசமான சமுதாயத்தைக் கட்டமைக்கும் பாவத்தைச் செய்கிறார்கள். வீரம், விவேகம், ஆற்றல், தன்னம்பிக்கை, ஒழுக்கம், நேர்மையான பணிவு, அஞ்சாமை, தலைமைப் பண்பு கொண்ட ஆசிரியர்கள் அருகிவிட்டார்கள் என்ற உண்மை நெஞ்சைச் சுடுகிறது. வலிமையான ஆசிரியர்கள் தேவை என்ற அறிவிப்புப் பலகை தமிழமெங்கும் உள்ள பள்ளிகளில் தொங்க விட வேண்டிய அவசியம் வந்துவிட்டது என்பதைக் கோபத்துடன் பதிவுசெய்கிறேன்.

- ரெ. ஐயப்பன், சமூக அறிவியல் ஆசிரியர், காந்தியடிகள் நற்பணிக் கழகம்,கும்பகோணம்.

SCROLL FOR NEXT