நடராசனின் இறுதி ஊர்வலத்திலும் தாளமுத்துவின் இறுதி ஊர்வலத்திலும் அறிஞர் அண்ணா ஆற்றிய எழுச்சிமிக்க உரையைக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின் ராஜாங்கம்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்தான் அண்ணா சிறைப் பிடிக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார். இந்தி எதிர்ப்புப் போரில் அண்ணாவின் பங்கு தனித்தன்மை வாய்ந்தது. பல மாநாடுகளில் இந்தித் திணிப்பு ஏன் கூடாது என்று தெளிவாக உரையாற்றி, மக்களை எழுச்சி கொள்ளச் செய்தார். சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அவர் ஆற்றிய உரைகள் கருத்தாழமிக்கவை.
அவருடைய நாடாளுமன்ற உரை வடபுலத்தோருக்குத் தென்னாட்டினரின் அச்சங்களையும் ஐயங்களையும் தெளிவுபடுத்துவதாக அமைந்தது. ‘‘அண்ணாதுரையின் உணர்ச்சிகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இங்கே இருப்பவர்கள் அதனைப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று லால்பகதூர் சாஸ்திரி அமைச்சரவையில் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இடம்பெற்றிருந்த இந்திரா காந்தி கூறியதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். அன்றைய ஆங்கில ‘தி இந்து’ இதழ் அண்ணாவின் அறிக்கைகளை ஒரு வரி விடாமல் வெளியிட்டது. அதேபோல் அவருடைய நாடாளுமன்ற உரைகளைச் சிதைக்காமலும் திரிக்காமலும் வெளியிட்டது.
- பேராசிரியர் அ. அய்யாசாமி,சென்னை-128.