புராணங்களும் இதிகாசங்களும் மிகச் சிறப்பானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக, அவற்றில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்காகவே, எவ்வித அடிப்படையுமற்ற ஒன்றை அறிவியலாக்கப் பார்ப்பது அறிவீனமாகவே இருக்கும்.
இங்குதான் ஒரு காப்பியத்தை, புராணத்தை அல்லது இலக்கியப் பனுவலை எப்படி வாசிப்பது என்பதுகுறித்த தெளிவு அவசியமாகிறது. காப்பியம் என்பது, வாய்மொழிக் கதைகளுடன் புனைவு கலந்து சொல்லும் இலக்கிய வகையே; புராணங்களும் அத்தகையவையே.
அவற்றில் இடம்பெறும் தொன்மக் குறியீடுகளை மானுடவியல், இனக் குழுவியல், சமூக வரலாறு மற்றும் நாட்டுப்புறவியல் போன்ற துறைகளின் வழியாக அணுகுவதே சிறப்பானதாக இருக்கும். மாறாக, அவற்றின் பிரம்மாண்டங்களை அறிவியல் எனச் சொல்பவர்கள் நம் மரபைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களாகவே இருக்க முடியும்.
- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.