மொழியுணர்வு சற்று மங்கியுள்ள இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான கட்டுரை ‘ஏன் மொழிப் போராளிகளை நாம் நினைவுகூர வேண்டும்?’
ஒவ்வொரு இந்தியரும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றித் தெரிந்துவைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் 1965 மொழிப்போரை ஒவ்வொரு தமிழரும் தெரிந்துவைத்திருப்பது. இந்தித் திணிப்பை எதிர்த்தவர்கள் திராவிடக் கட்சிகளே என அரசியல் சாயம் பூசுவது, கி.ஆ.பெ. விசுவநாதம், மறைமலையடிகளார், குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட எண்ணற்ற தமிழறிஞர்களைக் கொச்சைப்படுத்துவது போலாகும்.
ஆனால், அதன் பலனை அனுபவிப்பவர்கள் திராவிடக் கட்சியினரே என்பதை மறுப்பதற்கில்லை. அதன் வினையை அறுவடை செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்பதை இன்றைய மத்திய அரசின் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
- மு. சுப்பையா,ஸ்பிக்நகர்.
***
கண்ணோட்டம்
‘மொழிப்போர்: வரலாறு வரிசையிலும் இருக்கிறது’ கட்டுரை வாசித்தேன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலேயே, தமிழுக்காகத் தன் உயிரைத் தந்த முதல் தியாகியின் பெயரைப் பின்னுக்குத் தள்ளலாமா?
அவரின் தியாக வரலாற்றை எதிர்காலத் தலைமுறை முழுமையாக அறிந்துகொள்ள வழி செய்யாமலே, ஆண்டுதோறும் மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுவது எந்த விதத் தில் நியாயம்?
தியாகங்களும்கூட இங்கே சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்படுவது அவலமே.
- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.
***
தியாகம் சம அளவில் மதிக்கப்பட வேண்டும்
மொழிப்போர் குறித்து வெவ்வேறு கண்ணோட்டம் இருக்கிறது என்ற ஸ்டாலின் ராஜாங்கம் கட்டுரை கண்டேன். அது ஓரளவு உண்மைதான்.
1937-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போர் அப்போது பொதுமக்களின் பரவலான ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. சுயமரியாதைப் பிரச்சாரம் செய்து வந்த பெரியார் முன்னெடுத்த ஒரு போராட்டம் என்ற அளவில்தான் பொதுமக்களின் கவனத்தை அது பெற்றிருந்தது. ஆனால், 65-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போரட்டம் தமிழக மக்களின் பரந்த ஆதரவைப் பெற்றிருந்தது.
ஒட்டுமொத்த தமிழகமே இந்தி எதிர்ப்புப் போரில் அணிவகுத்தது. குறிப்பாக, 37- ல் இந்தியை ஆதரித்த ராஜாஜி 65- ல் இந்தியை எதிர்த்து நின்றார். காங்கிரஸ் தவிர, பிற எல்லாக் கட்சிகளும் இந்திக்கு எதிராக நின்றன. வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு சூழலில் நடந்த போராட்டமானாலும் தியாகிகளின் உயிர்த் தியாகம் சம அளவில் மதிக்கப்பட வேண்டும் என்ற கட்டுரையாளரின் கருத்து வரவேற்கத்தக்கது.
- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.