‘கல்வி முறை செல்ல வேண்டிய திசை எது?’ தலையங்கம் படித்தேன். கல்வி எனும் கலங்கரை விளக்கு, இனி கல்லாதோர்க்கு எட்டாக் கனியாகிவிடுமோ என்ற பெரும்பாலோரது கவலையைப் பிரதிபலித்தது தலையங்கம்.
கல்விபற்றிய ஆண்டாய்வறிக்கை (ஏ.எஸ்.ஈ.ஆர்.) சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மையப்படுத்தியே எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டிலும் இதே நிலைதான் தொடர்கிறது. காரணம், பாடத்திட்டம் தற்காலத்துக்கேற்ப ஏற்புடையதாகத் திட்டமிட்டுச் செய்யப்படாததே.
அது இயலாதபோது, மாணவர்களின் அடைவுத் திறனுக்கேற்ப, சிறு தேர்வுகள் மூலம் மாணவர்கள் இனங் காணப்பட்டு, குழுக்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ஆனால், இதைப் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மாணவர்களிடத்தில், தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டுவிடும் என்ற எண்ணமே இதற்குக் காரணம்.
ஆனால், இது உண்மையன்று. பின்தங்கிய மாணவர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கென தனிப் பயிற்று முறைகளை ஆராய்ந்து நெறிப்படுத்துதலே, அவர்களை நன்கு கற்கும் மாணவர்களோடு இணைப்பற்கான சிறந்த வழியாகும். பின்தங்கிய மாணவர்களை, தலைமாணாக்கர்களோடு இணைத்துக் கற்பிக்கும்போது, அவர்கள் சோர்வு அடைகின்றனர்.
கற்பதில் பின்தங்கிய மாணவர்கள் பெரும்பாலும் பள்ளிக்கு வராத அல்லது அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்களாகவே உள்ளார்கள். குடும்பச் சூழல், பெற்றோரால் கவனிக்க இயலாத நிலை போன்றவையும் இவற்றுக்குக் காரணங்களாக அறியப்படுகின்றன. ஆசிரியர்கள், ‘எளிமையிலிருந்து கடினத்தை நோக்கி…’ என்ற அருமையான கற்பித்தல் முறையைப் பின்பற்றுவது எக்காலத்துக்கும் பொருந்தும். இதையே உளவியலும் ஏற்றுக்கொள்கிறது. இத்தகு சூழலில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விடுப்பின்றிப் பள்ளிக்கு அனுப்பி, எதிர்காலத்தில் முன்னேறிய பண்பாடுமிக்க சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்களுக்கு உதவ வேண்டும்.
- அ. மயில்சாமி,தமிழாசிரியர், அரசுமேல்நிலைப் பள்ளி, கண்ணம்பாளையம்.