இப்படிக்கு இவர்கள்

மழலை மொழியில் கதைகள்

செய்திப்பிரிவு

குழந்தைகளைக் கதை சொல்லிகளாக மாற்றும் ‘தி இந்து’வின் முயற்சி பாராட்டுக்குரியது. அதேசமயம், குழந்தைகளுக்குக் கதைகளைப் பற்றிய புரிதலைத் தருவதும் அவசியம்.

முன்பெல்லாம் நாங்கள் கதைகளைத் தேடித்தேடிப் படிப்போம்; மாலை நேரங்களில் மூத்தவர்கள் அருகே அமர்ந்து கதைகள் கேட்டதும் உண்டு. மேலும், கதைகள் என்பவை பொழுதுபோக்குக்கானவை அன்று. அவற்றின் வழியாகவே வாழ்வின் விழுமியங்களைத் தெரிந்துகொள்கிறோம்.

‘ஏமாற்றுபவன் ஏமாறுவான்’ என்பதே பாட்டி வடை சுட்ட கதையின் வழி நாம் பெறும் பாடம். ஆக, கதைகள் என்பவை ஒருவகையில் நமக்கான ஆசான்கள். இன்றோ நவீனத் தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்டதால், குழந்தைகள் கதைகளைக் கேட்பதும், படிப்பதும் குறைந்துவிட்டது.

தொடர்ந்து கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் குழந்தைகளால்தான் நல்ல கதைசொல்லிகளாக இருக்க முடியும். ஆக, கதைகளைக் கேட்கவும் படிக்கவும் குழந்தைகளைத் தயார்படுத்துவது நமது கடமை.

- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.

SCROLL FOR NEXT