கலகக்காரர் என்ற பட்டம் பெரியாரைவிட வேறு யாருக்குப் பொருந்தும்? தமிழ்ச் சமூகம் அவரால் பல படி முன்னேறியிருக்கிறது.
சமூக மாற்றத்தை விரும்புபவர்கள், சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள், பதவி மற்றும் அதிகாரத்துக்கு ஆசைப்படக் கூடாது என்பதை வலியுறுத்தியதுடன், தன் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டியவர் பெரியார். இன்றைய தலைவர்கள் அவர் வழியில் சமூகப் பணி ஆற்றுவதே பெரியாருக்கு செய்யும் மரியாதையாகும். ஆனால், நம் சமகாலத் தலைவர்கள் அப்படி இருக்கிறார்களா?
- பொன். குமார்,சேலம்.
‘மதங்களை ஒழிக்க வேண்டும்' என்ற பெரியாரின் கொள்கை, லட்சியம் தற்கால உலகுக்கு எவ்வளவு அத்தியாவசியம் என்பதை, சமீபகாலமாக உலகின் பல பாகங்களில் நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. மதங்களால் விளைந்த நன்மைகளுக்கு இணையான அளவில் தீமைகளும் உள்ளன.
குறிப்பாக, மதங்களைக் காரணம்காட்டி அர்த்தமற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள்தான் உலகில் அதிகம். இந்தச் சூழலில் சமூக மாற்றத்துக்கான விடிவெள்ளியாக இருக்கும் பெரியாரின் கொள்கைகள் மக்களிடம் கொண்டுசெல்லப்பட வேண்டும்.
- எஸ்.எஸ்.ரவிக்குமார்,கிருஷ்ணகிரி.