போபாலில் ஆயிரக் கணக்கானோரின் இறப்புக்குக் காரணமான வாரன் ஆண்டர்சனை, சில மணி நேரத்திலேயே நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தது இந்திய அரசு. இதே மாதிரி ஒரு சம்பவம், அமெரிக்காவில் ஓர் இந்திய நிறுவனத்தால் ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?
- டாண்டி,‘தி இந்து’ இணையதளத்தில்…
கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் இறக்கக் காரணமாக இருந்த போபால் யூனியன் கார்பைடு ஆலையின் தலைவரைப் பாதுகாப்பாக இந்தியாவை விட்டு வெளியேற அனுமதித்த அர்ஜுன் சிங்கையும், ‘இதுபற்றி ஒன்றும் தெரியாது’ எனக் கைவிரித்த ராஜீவ் காந்தியையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் ‘டௌ’ நிறுவனத்துக்குச் சட்ட ஆலோசனை வழங்கினார்கள் என்பதும் 2008-ல் பாஜக ‘டௌ’ நிறுவனத்திடமிருந்து நன்கொடையைப் பெற்றது என்பதும் வேதனை தரும் செய்திகள்.
- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.
பேரழிவும் பேரிழிவும்
போபால் பேரழிவின் 30-வது ஆண்டில், மிகவும் காத்திரமான பதிவுகளை ‘தி இந்து’ செய்திருக்கிறது. ஒரு பன்னாட்டு நிறுவனம், தனது சொந்த நலனைக் காத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு நேரடிச் சாட்சியம் யூனியன் கார்பைடு ஆலையில் நிகழ்ந்த விஷவாயுக் கசிவும், அதனை அடுத்த நடப்புகளும்.
இந்தப் பதிவுகள் அரசியல், சமூகத் தளங்களில் காங்கிரஸ்-பாஜக ஆகியவற்றின் உண்மை இயல்பை வெளிப்படுத்துகின்றன. தமது குடும்பங்களில் அதிக உறுப்பினர்களை இழந்த சம்பக் தேவி சுக்லா மற்றும் ரஷிதா பீபி என்ற இரண்டு முதிய பெண்மணிகள், ‘ஜாடு சே மாரோ’ (துடைப்பக் கட்டையால் அடி!) என்ற முழக்கத்தோடு கிராமங்களில் துடைப்பங்களைச் சேகரித்துக்கொண்டு, சிகாகோ நகரில் இருக்கும் ‘டௌ’ கெமிக்கல்ஸ் நிறுவன வாசலில் போய் நின்று நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்.
இப்போதும் பன்னாட்டு நிதி மூலதனத்துக்காக எல்லாக் கதவுகளையும் தகர்த்து, வழி ஏற்படுத்தத் துடிக்கிறது மோடி அரசு. தங்களுக்கு வாக்களித்தவர்களுக்குக் கட்சிகள் காட்டும் மரியாதை இவ்வளவுதான்.
- எஸ். வி. வேணுகோபாலன், சென்னை.