‘முன்னேற்றத்தைக் காண்பியுங்கள் அல்லது வெளியே செல்லத் தயாராய் இருங்கள்’ இதுதான் சமீபத்திய மத்திய அமைச்சரவை மாற்றத்தின் மூலம் மோடி வெளிப்படுத்திய செய்தி.
சறுக்கலைப் பூசி மெழுக இதைவிட இன்னும் பெரிய வசனங்களெல்லாம் இனிமேல்தான் வரப்போகின்றன. மாறாக, மக்களின் வரிப் பணம் மற்றும் தேசநலன் சார்ந்த கொள்கைகள் நிர்ணயத்துடன் தொடர்புடைய நிகழ்வு அது. ஐந்தே மாதங்களில் அமைச்சர்களின் எண்ணிக்கை 66-ஐத் தொட்டிருப்பது ‘குறைந்த அரசாங்கம்’ என்ற மோடியின் ஆரம்ப கால கோஷத்தின் ஆயுட்காலத்தைக் குறைத்திருக்கிறது. மத்திய நிர்வாகம்பற்றிய புரிதல்களில் இன்னமும் மோடி அரசு தவழும் குழந்தையாய் உள்ளதோ என்ற ஐயப்பாடும் எழுகிறது.
நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீர்க்காமல், வளர்ச்சி என்ற மாயையை நோக்கி அமைச்சர்களை விரைவாக ஓடச் சொல்வதும், வேகம் குறைந்தால் ஓட்டத்திலிருந்து விலக்கிவைப்பதும் தனியார் நிறுவனங்களுடைய நடைமுறையை நினைவூட்டுகிறது. மத்திய அமைச்சரவை என்பது நாட்டின் சாமானியர்களின் வலியையும், வேதனையையும் புரிந்து, விவேகத்துடன் செயல்பட வேண்டிய அமைப்பு. தனியார்மயமாக்கல், மானியக்குறைப்பு மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் விற்பனைக் கேந்திரங்களாக அமைச்சகங்களை மாற்றியவர்களின் இன்றைய நிலையை நாடறியும்.
மோடி அவர்களே, சாதாரண மக்களைப் பற்றிய புரிதலை முதலில் தொடங்குங்கள். உங்களின் அமைச்சரவை சகாக்கள் மத்தியில் அப்புரிதலை விதையுங்கள், விரிவுபடுத்துங்கள். ஒவ்வொரு அமைச்சரவை மாற்றம் தொடர்பான முடிவின் போதும் சாமானியர்களுக்கு இம்மாற்றம் என்ன பலனை ஏற்படுத்தப்போகிறது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். தயவுசெய்து இறுதிவரை சாமானியர்களின் பக்கம் நில்லுங்கள் மோடி அவர்களே! உங்களிடம் இதை எதிர்பார்ப்பது எங்களுக்கான உரிமைதானே!
- முனைவர். சீ. ஜானகிராமன்,கும்பகோணம்.