குழந்தைகள் வாழும் தெய்வங்கள். மழலை, அன்பின் உலக மொழி. இன்றைய குழந்தைகளின் உலகம் எப்படி இருக்கிறது? அவர்களின் உலகம் பெற்றோர்களின் நம்பிக்கை சிந்தாந்தங்களில் சிறைபட்டிருக்கிறது. மனிதர்களிடமிருந்து விலகி உயிரற்ற பொருட்களின் மீது குழந்தைகளுக்குப் பற்று அதிகமாவதைக் காண முடிகிறது. ஏனென்றால், அவர்களைச் சுற்றி அவைதான் அதிகமாக இருக்கின்றன. குழந்தை தவறு செய்யும்போது மாமா, சித்தப்பா என்று யார் வேண்டுமானாலும் கடுமையாகக் கடிந்துகொண்டு திருத்த முடிந்தது. இப்போது யாருமே அப்படிச் செய்ய முடியாது என்ற நிலைதான். அந்த அளவுக்குக் குடும்பங்களில் நெருக்கம் குறைந்துவிட்டது. கதைசொல்லிகளான தாத்தா, பாட்டியை இழந்த குழந்தைகள் இரக்கம், அன்பு, பிறருக்கு உதவுதல், மரியாதை கொடுத்தல் போன்ற பல குணங்களைக் கற்க வழியில்லாமல் போகிறது.
புத்தக மூட்டைகளுக்குள் முடக்கும் முயற்சி, அதையே கல்வி என்று பறைசாற்றும் நிறுவனங்கள், சுதந்திரச் சிந்தனையில்லாத ஆசிரியர்களின் உபதேசங்கள், ‘பத்திரமா வெச்சுக்கோ யாருக்கும் கொடுக்காதே’ என்னும் ‘அரிய’ பொன்மொழி, எப்படியாவது முதல் ஆளாகவே இருக்க வேண்டும் என்ற சிந்தனை, பாதைகளை மறந்து விட்டு இலக்குகளை நோக்கிய பயணம் என்று எங்கோ போய்க்கொண்டிருக்கிறது நம் குழந்தைகளின் உலகம்.
தவறு செய்யும்போது ஆசிரியரால் தரப்படும் சிறிய தண்டனை மாணவர்களைப் பக்குவப்படுத்துகிறது. தோல்வி, அவமானங்களைப் பொறுத்துக்கொண்டு முன்னேறும் பண்பினைக் கற்றுத்தருகிறது. குழந்தைகளைச் செயல்களில் பெரியவர்களாக்கிவிட்டோம் உள்ளத்தில் வறியவர்களாக்கிவிட்டோம். அறிவாளிகளாக வளரும் இத்தலைமுறை இரக்கம், மனிதநேயம் உள்ள உணர்வாளர்களாக உருவானால் மகிழ்ச்சியே.
- ரெ. ஐயப்பன், சமூக அறிவியல் ஆசிரியர்,கும்பகோணம்.