இப்படிக்கு இவர்கள்

இப்படிக்கு இவர்கள்: சீண்டும் சீனா

செய்திப்பிரிவு

சீண்டும் சீனா

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சினை என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ‘தி இந்து' வில் ‘இரண்டரை போர் முனைகளில் முற்றுகை!’ என்ற கட்டுரை வெளிவந்திருக்கிறது. “ ஒரே பிரதேசம், ஒரே சாலை என்ற சீனாவின் புதிய திட்டம் பொருளாதாரத்தைவிட ராணுவ நோக்கம் அதிகம் கொண்டது. அணு ஆயுதங்களை வைத்திருக்கும், அடுத்தடுத்த நிலப் பகுதியைக் கொண்டிருக்கும் இரண்டு நாடுகளால் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது இந்தியா” என்ற வரிகள் சிந்திக்கத் தூண்டுகின்றன. ஐநாவுக்கு அடங்காமல், அண்டை நாடுகள் அத்தனையுடனும் அடாவடி காட்டுகிற சீனப் பூனைக்கு மணி கட்டுவது யார்?

-வேல்முருகன், திண்டிவனம்.

பெட்ரோலும் அந்நிய செலாவணியும்

‘பெ

ட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்கு கீழ் கொண்டு வராதது ஏன்?’ என்று- சென்னையில் நடந்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அளித்த விளக்கம் (ஜூலை 10) சரியானதே. ‘பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்தால் மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படும், எனவே, அவற்றுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதால்தான் அத்தகைய முடிவு எடுக்கப்பட்டது என்கிறார் வெங்கய்ய நாயுடு. கூடவே, வரியைக் குறைத்தால் டீசல், பெட்ரோல் விலை பாதியாகக் குறையும் என்பதையும், அதனால் பெட்ரோல் பயன்பாடு மிகமிக அதிகரித்து நாட்டின் அந்நியச் செலாவணிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் அவர் சொல்லியிருக்கலாம். அதேபோல, மாநில அரசுகளைப் போலவே மத்திய அரசுக்கும் வரி வருவாய் குறையும் என்பதையும் நேர்மையுடன் அவர் ஒப்புக்கொண்டிருக்கலாம்.

-ஜெகநாதன், தொண்டி.

மன நிம்மதி

மேற்கு வங்க மாநிலத்தில் மதக்கலவரம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது (ஜூலை.10) என்ற செய்தி மனநிம்மதியைத் தருகிறது. நாட்டில் ஆங்காங்கே மதக்கலவரங்களைத் தூண்டுவதற்கான வாய்ப்புகள் தென்படவே செய்யும். அது நடந்தால் என்னென்ன பாதிப்புகள் நிகழும் என்பதை உணர்ந்து ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளோர் அமைதி காப்பதே புத்திசாலித்தனம். உணர்வு ரீதியாக கிளர்ந்தெழுந்து, நஷ்டத்துடன் அமரப்போவது நாம் மட்டுமல்ல நாடும்தான்.

-அருளானந்தம், வேளாங்கண்ணி.

ஆபத்தான அணுகுமுறை

பொறியியல் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவரொருவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி வருந்துதற்குரியது. ஆசிரியர் செய்த கருத்துப் பிழையைச் சுட்டிக்காட்டியதால் அம்மாணவரைத் தொடர்ந்து ஆசிரியர் கொடுமைப்படுத்தியதுடன் தேர்வு எழுதுவதைத் தடுத்ததால்தான் இந்தத் துயரம் நடந்துள்ளது என்பது அதிர்ச்சி தருகிறது. ஆசிரியர் எல்லாம் அறிந்தவருமல்லர், தவறுகள் செய்யாதவருமல்லர். தவறைச் சுட்டிக் காட்டியமைக்குப் பாராட்டு தெரிவித்திருந்தால் மாணவரிடையே அவரது மதிப்பு கூடியிருக்கும். ஒரு உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்தமை அவரை வாழ்நாள் முழுமையும் வருத்தும்.

-ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

நூல்களைத் தொகுத்திடுங்கள்!

இன்று நாம் தமிழின் பெருமையையும், பழமையையும் புகழ்ந்து பெருமிதம் கொள்கிறோம் என்றால், அதன் பின்னணியில் பண்டைய இலக்கியங்களைத் தேடித் தேடித் தொகுத்த உ.வே.சாமிநாதய்யர் போன்ற அறிஞர்களின் உழைப்பும், தியாகமும் அடங்கியிருக்கிறது. ஏட்டுச் சுவடிகளைத் தேடித் தொகுத்த அந்த உணர்வும், உழைப்பும் அடுத்தடுத்த தலைமுறையிடம் இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தச் சூழலில், நூல்தொகைகள் ஏன் வெளியிடப்படுவதில்லை என்ற கேள்வியுடன் எழுதப்பட்ட தலையங்கம் (ஜூலை 8) முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழில் வெளிவரும் புத்தகங்களின் விவரங்கள் அடங்கிய நூல்கள் அடங்கிய தொகுப்புகளைத் தமிழக நூலகத் துறை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும்.

-எஸ்.பரமசிவம், மதுரை.

SCROLL FOR NEXT