’குளங்களைக் கரைசேர்ப்போம்’ கட்டுரை’ நம் கண்முன்னே அழிந்துவரும் குளங்களின் அவசியத்தை உணர்த்துகிறது. நகர்மயமாதலின் பாதகமான விளைவுகளில், குளங்களைக் காணாமல் போகச்செய்வதும் ஒன்று. ஆறுகளும், அணைக்கட்டுகளும்தான் முக்கியம் என்று நாம் நினைக்கிறோம். நிலத்தடி நீரை உயர்த்த உறுதுணையாக இருக்கும் குளங்களைப் பற்றிய கவலை யாருக்கும் இல்லை. எஞ்சி இருக்கும் குளங்களையாவது பாதுகாக்க அரசு முன் வர வேண்டும். கிராமங்கள் தோறும் புதிய குளங்கள் அமைப்பதற்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்.
- மு.க. இப்ராஹிம்,வேம்பார்.
***
பழங்காலத்தில் நம் பாசன முறையே ஏரிகள், குளங்களை நம்பித்தான் இருந்தது. எனவே, அவற்றின் தேவையை உணர்வது முக்கியம். கடுமையான கண்காணிப்பின் படி ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வரும் வழிகளை சரிசெய்து மழைநீரைச் சேமித்து வைத்தால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துவிடும். தமிழகத்தில் 20, 25 ஆண்டுகளாக நீர்ப்பாசனத் துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை. குப்பைகளைக் கொட்டத்தான் ஏரி, குளங்களின் கரைகள் உள்ளன என நினைத்துவிட்டார்கள் போலும் தமிழக உள்ளாட்சித் துறையினர்!
- பாலகுமார், மின்னஞ்சல் வழியாக…