இன்று (18.11.2014) ‘தி இந்து’ நாளிதழில் ‘கர்நாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி 300-க்கும் மேற்பட்ட இந்து மதச் சாமியார்கள் பெங்களூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என்ற செய்தி படித்தேன். கர்நாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்தப்போவதாக, அம்மாநில அரசு கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தது. இதனைக் கண்டித்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா, ஸ்ரீராமசேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. எனவே, அந்த சட்டத்தை கர்நாடக அரசு கிடப்பில்போட்டது.
இந்தச் செய்தியின் மூலம் யார் உண்மையான இந்துமதக் காவலர்கள் என்பதும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற இந்துத்துவா அமைப்புகள், மதத்தின் பேரால் மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்க விழைகின்றன.
இதனால், தங்கள் ஆதிக்கச் சுரண்டலை நிரந்தரமாக்க வேண்டும் என்ற நினைப்பைக் கொண்டவர்கள் அவர்கள் என்பது தெளிவாகிறது. மகாராஷ்டிரத்தில் இதுபோன்ற மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் வேண்டும் என 14 ஆண்டுகள் போராடிய டாக்டர் நரேந்திர தபோல்கர் 20.08.2013-ல் மதவெறி பிடித்த இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் இறந்து நான்கு நாட்களிலேயே 24.08.2013-ல் மகாராஷ்டிர அரசு மூட நம்பிக்கை ஒழிப்புக்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அதை ஒட்டியே கர்நாடக அரசு கடந்த ஆண்டு இதே போன்று சட்டம் இயற்றப்போவதாக அறிவித்தது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் மண் என்று பெருமை பேசும் தமிழ்நாட்டில், இதுபோன்ற சட்டம் எப்போது வரும் எனத் தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நடராஜன், மின்னஞ்சல் வழியாக…