வ.உ.சி. தொடர்பான கட்டுரையில் பல தகவல்களை நான் தெரிந்துகொண்டேன். அதே வேளையில், வ.உ.சி-க்குப் பெரிதும் உதவிய ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட் என்பவரைப் பற்றிய தகவலைக் கட்டுரையாளர் குறிப்பிடத் தவறிவிட்டார் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8,000 பங்குகளை ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட் தனது கம்பெனி சார்பாக வாங்கினார். அதிகப் பங்குகளை வாங்கிய காரணத்தால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். இதனை ‘இந்தியா' பத்திரிகையில் பாரதியார், ‘இந்த கம்பெனியின் பிரசிடென்ட் மிஸ்டர் பாண்டித்தேவர் (பாலவனந்தம் ஜமீன்தார்), மெஸர்ஸ் ஹாஜி. பக்கீர் முகம்மது சேட் கம்பெனியாரே செக்ரடெரிகள், அஸிஸ்டெண்ட் செக்ரடெரியாக தூத்துக்குடி வக்கீல் மிஸ்டர் சிதம்பரம் பிள்ளை நியமிக்கப் பட்டிருக்கிறார்’ என்று 20-10-1906 அன்று எழுதியதை சீனி. விஸ்வநாதன் தனது ‘சுதேசியத்தின் வெற்றி’ என்ற நூலில் எடுத்தாண்டுள்ளார்.
- ஹாஜா மொய்னுதீன்,ராஜகிரி.
‘வ.உ.சி: கப்பலோட்டிய இந்தியர்’ கட்டுரை படித்தேன். நாட்டின் விடுதலைக்கும் தமிழ்ப் பணிக்கும் அரும்பாடுபட்ட, வ.உ. சிதம்பரம் பிள்ளை, வர்க்கப் போராட்டத்துக்கும் தலைமை தாங்கினார் என்ற செய்தி, கட்டுரையில் விடுபட்டுள்ளது. தூத்துக்குடி ஆர்.வி. மில்லின் (தற்போதைய மதுரா கோட்ஸ்) தொழிலாளர் கொத்தடிமை முறைக்கு எதிராகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்துப் போராடிய பெருமை வ.உ.சி-யையே சாரும். இதனைச் சமூக ஆராய்ச்சி எழுத்தாளர் ஆ. சிவசுப்பிரமணியம் தன்னுடைய ‘வ.உ.சி-யும் - வர்க்கப் போராட்டமும்' என்ற நூலில் தெளிவாகக் குறிபிட்டுள்ளார். வ.உ.சி-க்கு அப்போதைய காங்கிரஸ் அரசு சிலை வைக்க நிதி உதவி செய்ய மறுத்தாலும், பின்னர் வந்த காங்கிரஸ் அரசு, வ.உ.சி-க்கு தூத்துக்குடி துறைமுக வாயிலிலே சிலை வைத்ததோடு, தூத்துக்குடி துறைமுகத்துக்கு ‘வ.உ. சிதம்பரனார் துறைமுகம்’எனப் பெயர் சூட்டியது.
- ப. சுகுமார்,தூத்துக்குடி.