பொறியியல் முதலாமாண்டுத் தேர்வுகளில் பாதிக்கு மேற்பட்ட மாணவர் தேர்ச்சி பெறத் தவறிவிட்ட செய்தி தீவிர ஆய்வுக்குரியது. மேலெழுந்தவாரியாக மேனிலைக் கல்வியைச் சாடுவது முறையன்று. பதினொன்றாம் வகுப்புப் பாடங்களை நிறைவுற நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேனிலைப் பள்ளிகளுக்குப் பொருந்தாது. உயர் கல்வியை முன்னிறுத்தி மாணவரது கற்றல் திறனுக்கு அப்பாற்பட்டதாக, சுமை கூடியதாக மேனிலைக் கல்விப் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான மாணவர்கள் தனிப்படிப்புக்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளார்கள். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்குரிய தகுதி மதிப்பெண்ணும் 40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பொறியியலில் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் 50%. பல்வேறு பள்ளிகளிலிருந்து பல நிலைகளில் உள்ள மாணவரும் கல்லூரியில் சேரும்போது மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து அதற்கேற்பத் தம் கற்பித்தல் முறையை ஆசிரியர்கள் வகுத்துக்கொள்ள வேண்டும்.
தொடக்கப் பள்ளியினின்று மேனிலைப் பள்ளி வரை அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் கல்வி பெற்றவர், ஆனால் உயர்கல்வியில் ஆசிரியர் கல்வி பெறாததால் பயிற்று முறையைத் தெரிவு செய்ய இயலாது விரிவுரை நிகழ்த்தும் பாணியை மேற்கொள்ளும் பொழுது புதிய சூழ்நிலையில் மாணவர் திண்டாடுவது இயற்கையே, பழி போடுவதற்கு மாறாக உண்மையான காரணங்களை ஆய்வு முறைகளைப் பயன்படுத்திக் கண்டறிய முற்பட அண்ணா பல்கலைக் கழகம் முற்பட வேண்டும். கற்க வந்த ஒவ்வொரு மாணவரையும் கற்றுத் தேர்ந்தவராக்குவது கல்லூரிகளின் பொறுப்பும் கடமையுமாகும்.
- ச.சீ. இராஜகோபாலன், கல்வியாளர்,சென்னை.