‘வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்' தலையங்கம் படித்தேன். பால் மணம் மாறாத பிஞ்சுகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கும் மனித மிருகங்களாக ஓரிரு ஆசிரியர்கள் மாறிவருவது தலைகுனிவை ஏற்படுத்தும் செய்தி.
பணத்துக்காக அலையும் பெற்றோர்களால் பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேச முடியாததே இப்படிப்பட்ட இன்னல்களுக்குக் காரணம். முன்பு தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என கூட்டுக் குடும்பமாக இருந்தபோது பிள்ளைகளிடம் யாரோ ஒருவராவது உட்கார்ந்து பேச வாய்ப்பு கிடைத்தது. இன்று பிள்ளைகள் எழுவதற்கு முன்பு வேலைக்குச் சென்று, இரவு தூங்கிய பின் வரும் அப்பா அம்மாக்களால் பிள்ளைகளின் மீது அன்பும் அக்கறையும் காட்ட முடிவதில்லை. அன்புக்கு ஏங்கும் பிள்ளைகள் அன்பு காட்டுபவர்களிடம் அடிமையாகிவிடுகின்றனர். இப்படி நெருக்கமாகப் பழகும் பிள்ளைகளிடம் ஒருசிலர் தங்களின் இச்சைகளைத் தீர்த்துக்கொள்கின்றனர். இவை அனைத்துக்கும் முக்கிய காரணம் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடாததே. அப்படிச் செலவிடும்போது தலையங்கம் கூறுவதுபோல் விழிப்புணர்வு வீட்டிலிருந்து ஆரம்பிக்கும்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.