உலகின் மிகப் பெரிய நாவலாக வளர்ந்துகொண்டிருக்கும் ‘வெண்முரசை’ நாம் ஒவ்வொருவரும் வரவேற்க வேண்டும். மகாபாரதத்தை ஒரு மதக் காப்பியமாகவே நாம் கருதிக்கொண்டிருக்கிறோம். அது தவறானது மட்டுமன்று; ஆபத்தானதும்கூட. அக்காப்பியம் முன்வைப்பது பரந்துபட்ட வாழ்வின் பலவகையான நிகழ்வுகளை. குறிப்பாகச் சொல்லப்போனால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உலகையும், உலகில் இருக்கும் ஒவ்வொருவரையுமே அது நம்முன் விரித்துக்காட்டுகிறது. அக்காப்பியத்தின் கதைகள், நம் வாழ்வை எதிர்கொள்ளும் அசாத்திய தருணங்களை எளிதில் கடக்க உதவுகின்றன. மேலும், மகாபாரதம் அறத்தை வலியுறுத்தும் நீதிநூலன்று; அறம் எது என்பதை நாமே முடிவுசெய்ய உதவும் தொகுப்பு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் நடைமுறை வாழ்வில் கலந்திருக்கும் மகாபாரதத்தை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய முயலும் ஜெயமோகனின் முயற்சி பாராட்டுக்குரியது.
முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.