கல்விக்கூடங்கள் தனி மனித ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றுடன் கூடிய கல்வியைக் கற்பிக்கும் நிலையிலிருந்து விலகி, மதிப்பெண்களை மட்டுமே பெற்றுத் தரும் நிலையங்களாக மாறிவருவது வேதனைக்குரியது மட்டுமல்ல, தீவிர சிந்தனைக்குட்பட்டதும்கூட.
பதின்பருவ மாணவர்கள் சிலரின் சிகை அலங்காரமும், உள்ளாடை தெரியும்படியான கால்சட்டைகளை அணிந்துவரும் செயலும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது.
அன்பாகவும் உளவியல்ரீதியாகவும் அறிவுரைகளைச் சொன்னாலும், பெற்றோரை அழைத்து அறிவுறுத்தினாலும்கூட பலன் ஏதுமில்லை. மாணவர்களை வார்த்தையால்கூடக் காயப்படுத்தக் கூடாது என்ற அரசின் அறிவுறுத்தலால், பெரிய தவறுகளைச் செய்யும் மாணவர்களைக்கூட திருத்தும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
இதன் விளைவாக, வருங்காலச் சந்ததியினரின் வாழ்க்கையும், சமுதாயமும் பாழாகின்றது. மாணவர்களை நல்வழிப்படுத்தி, அவர்கள் வாழ்வு செம்மையுற பாடத்திட்டத்தோடு இணைந்த ஒழுக்கக் கல்வி மிகவும் அவசியம்.
- சு.தட்சிணாமூர்த்தி, கோவை.