இப்படிக்கு இவர்கள்

கல்வி அறமும் நேர்மைத் திறனும்

செய்திப்பிரிவு

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, தான் பணிபுரிந்துவந்த ஆய்வு நிறுவனத்திலிருந்து வெளியேறி, நிறுவனம் சார் ஆய்வுப் பணிகளில் ஈடுபடாமல் இருந்த காலம் அது. ‘‘ஏன் சார் அங்கிருந்து நின்னுட்டீங்க?”என்றேன்.

‘‘பாலிடிக்ஸ் பொறுக்க முடியலீங்க” என்றார். உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் மத்தியில் நிலவும் சீனியாரிட்டி, தனிநபர் ஈகோ, எங்கும் நிறைந்திருக்கும் சாதி, பொதுவான பொறாமை போன்ற காரணங்களால் பேராசிரியர்கள் மத்தியில் நடைபெறும் விஷயங்களைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

இவற்றைத்தான் பேரா. எம்.எஸ்.எஸ். பாண்டியன் முற்றிலும் வெறுத்தார். அதைச் சகித்துக்கொள்ள முடியாதபோது வேலையை ராஜினாமா செய்யவும் வேலையை இழக்கவும் தயங்கியதில்லை. ‘‘சரி, வருமானத்துக்கு என்ன செய்கிறீர்கள்?’’ என்றேன். ‘‘வருடத்துக்கு மூன்று மாதம் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்குச் சென்றுவருகிறேன். நம் நாட்டில் 12 மாதத்துக்குக் கிடைக்கும் வருமானம் கிடைத்துவிடுகிறது. மாணவர்களும் நன்கு பாடம் கேட்கிறார்கள். மனதுக்கும் நிறைவுதான். ஒரே குறைதான், நம் நாட்டுக்கு உழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் மட்டுமே. பார்ப்போம்” என்றார்.

எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் காசு பார்க்கவும் காக்காய் பிடிக்கவும் காரியம் ஆற்றும் மனிதர்களுக்கு மத்தியில், பேரா. எம்.எஸ்.எஸ். பாண்டியன், கல்வி அறமும் நேர்மைத் திறனும் கொஞ்சமும் குறையாமல் வாழ்ந்தவர்.

பேரா.நா. மணி,ஈரோடு.

SCROLL FOR NEXT