இப்படிக்கு இவர்கள்

சிறையில்லா சிறகுகள் லா.ச.ரா-வின் எழுத்து

செய்திப்பிரிவு

லா.ச.ரா-வின் எழுத்தைப் படிக்க பலமுறை முயன்று தோற்றுதான் போயிருக்கிறேன். ஒரு வாக்கியத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போதே பாதி புரியும், மீதி புரியாது; அப்புறம் முழு வாக்கியமும் புரியாது. இப்படி மொழிநடையையே ஒரு புதிராக வைத்திருக்கும் ஒருவரை தமிழ் இலக்கிய உலகம் கொண்டாடும் மாயத்தை எண்ணி வியந்திருக்கிறேன்.

லா.ச.ரா. பற்றிய கட்டுரையைப் படித்த பின்தான் லா.ச.ரா-வின் எழுத்துகள் எந்த விதமான கட்டமைப்புச் சிறையிலும் அடைபடாத சிறகுகள் என்பது புரிந்தது. ‘சொல்லழகும் மெய்ப்பொருள் தேடலும் தரும் தரிசனங்களின் படைப்பனுபவம் லா.ச.ரா-வின் கதைகள்'-என்ற வரிகளை நினைவில் வைத்துப் படித்தால் அவரது கதைகளைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

- ஜே. லூர்து,மதுரை.

‘நிர்மலமான நீல வானில் அசிங்கமாக கிறுக்கி கொண்டு ஒரு புகை வண்டி...’, ‘தீயில் காய்ந்த கல்லில் தோசை எழுதியாகிறது…’ பல காலம் எழுதாமல் இருந்துவிட்டுத் திடீரென்று எண்பதுகளில் மோனா மாத இதழுக்காக லா.ச.ரா.எழுதிய ‘கல் சிரிக்கிறது’ சிலிர்க்க வைக்கும் ஓர் அனுபவம்! ‘பாற்கடல்’ சிறுகதை உலகத்தின் மிகச் சிறந்த சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெறத் தகுதியானது. கண்ணில் பட்டாலே காட்சிகள் விரிய வைக்கும் அற்புதத்தை நிகழ்த்தும் எழுத்துக்கள் அவருடையவை! நிச்சயம் அவர் ஒரு சகாப்தம்தான்.

- வடுவூரான்,‘தி இந்து’ இணையதளம் வழியாக…

SCROLL FOR NEXT