இப்படிக்கு இவர்கள்

தமிழக மக்களுக்கு பால் வார்க்குமா அரசு?

செய்திப்பிரிவு

பால் விலை உயர்வு நியாயமற்றதுதான். பிறந்த குழந்தை முதல் மரணத்தின் கடைசி நிமிடம் வரை உயிரோடும் உணர்வோடும் சம்பந்தப்பட்டது பால். பால்சார்ந்த உணவுப் பொருள் விலை ஏறினால், நடுத்தரக் குடும்பங்களைப் பாதிக்கும். அரசு நினைத்தால் பால் பாக்கெட்டின் விலையில் பாதி விலையில் பால் திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்து புதிய புரட்சியே ஏற்படுத்தலாம். தண்ணீர், உணவு போன்ற திட்டங்களைப் போல. பசிக்கிறது என்பதற்காக ஒரு குழந்தைக்குப் பாலும் ஒரு குழந்தைக்குக் கஷாயமும் கொடுப்பது நியாயமல்ல. விலையைக் குறைத்து வயிற்றில் பால் வார்க்குமா மக்கள் நல அரசு?

- கூத்தப்பாடி மா. கோவிந்தசாமி,தருமபுரி.

தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் வயோதிகர்களுக்கும் நோயாளிகளுக்கும் பால்தான் உணவாகவும் மருந்தாகவும் இருப்பதால், பல செலவுகளைச் சுருக்கிக்கொண்டு மக்கள் ஓரளவு சமாளித்தார்கள். இப்போது ஒரேயடியாக 10 ரூபாய் உயர்த்துவது கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாத செயல்.

பால் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இந்தச் சுமையைத் தாங்கித்தான் தீர வேண்டும். பல்லாயிரக் கணக்கான மதுக் கடைகளைத் திறந்து, மக்களின் மதிமயக்கத்தில் அதே லாபத்தைப் பயன்படுத்தி, அவர்களுக்கே பல இலவசங்களை வாரி இறைக்கும் அரசு, பால் விலை உயர்வைக் கைவிட வேண்டும். இதை வலியுறுத்தும் தலையங்கம் வலுவான காரணங்களை முன்வைக்கிறது. கொள்முதலுக்கும், விற்பனைக்கும் இடையே இருக்கும் 10 ரூபாயில், ஐந்து ரூபாய் உற்பத்தியாளருக்குப் போக மீதம் உள்ள ஐந்து ரூபாய் ஏற்கெனவே பாலில் கலப்படம் செய்த, செய்வதற்குத் துணை போன மோசடியாளர்களின் பாக்கெட்டை நிரப்பத்தானே?

- சோ.சுத்தானந்தம்,சென்னை.

SCROLL FOR NEXT