இப்படிக்கு இவர்கள்

அசுத்தமும் சுத்தமும்

செய்திப்பிரிவு

‘இந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி?’ தலையங்கம் படித்தேன். நாட்டைச் சுத்தப்படுத்தும் திட்டம் தலைகீழான திட்டமோ என்ற ஐயம் எழுகிறது.

‘பொது இடங்களில் சுத்தம் செய்வதற்கு அனைவரும் வாரத்தில் 2 மணி நேரம் ஒதுக்க வேண்டும்’ என்ற பிரதமரின் கோரிக்கை சரி. ஆனால், அந்த பொது இடங்களில் குப்பைகளைப் போடுபவர்கள் யார்? அயல் கிரகத்தினரா? மேலே கூறிய ‘அனைவரும்’ என்பதில் அடங்கியுள்ளவர்கள்தானே பொது இடங்களில் குப்பைகளையும் போடுகிறார்கள்.

திருடன் யார் என்று தெரிந்தும் அவனைப் பிடிக்காமல், நீங்கள் உங்கள் பொருளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள் என்று ஒரு அரசாங்கம் கூறுவது எவ்வளவு அபத்தமோ அதுபோலத்தான் இதுவும். பொது இடங்களில் குப்பைகள் வராமல் தடுக்கப் பல வழிமுறைகளைக் கையாளலாம். சரியான இடங்களில் மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டிகள் அதிக அளவில் வைப்பது, குப்பைகளை இங்கே போடாதீர்கள் என்ற அறிவிப்புப் பலகைகள் வைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இதனையும் மீறி குப்பைகளைப் பொது இடங்களில் போடுபவர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமோ அல்லது காவல் துறையினர் மூலமோ தண்டத்தொகை வசூலித்தாலே பொது இடங்கள் சுத்தமாகிவிடும். அனைவரும் ஒன்றிணைந்து எத்தனை நாட்களுக்கு இதனைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பார்கள். ஒரு நாளில் இந்தச் செயல் அலுப்பாகி ஒரேயடியாகத் திட்டமே தோல்வியில் முடிந்துவிடும்.

- வீ.சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.

SCROLL FOR NEXT