இப்படிக்கு இவர்கள்

வாலிபக் கவிஞர்

செய்திப்பிரிவு

கண்ணதாசன் காலத்தில் தொடங்கிய வாலியின் பயணம் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் காலம் வரை சலிப்பின்றித் தொடர்ந்தது. ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் இடம்பெறும் ‘முன்பே வா’ பாடலின் இடையில் ‘பூவைத் தாய்ப் பூ வைத்தாய் / நீ பூவைக்கோர் பூ வைத்தாய்’ எனும் வரிகளில் பொருள் தெரியாமலே சொக்கிப்போனவர்கள் உண்டு. ‘அன்பே வா முன்பே வா’ என்றுதான் வாலி முதலில் எழுதினாராம். ஏ.ஆர். ரகுமான்தான் ‘முன்பே வா… என் அன்பே வா’ என மாற்றியிருக்கிறார். காதலைக் கொண்டாடிய வாலி தனக்கு மிக நெருக்கமான கிருஷ்ணனை ‘ஒரு நாள் ஒரு கனவு’ படத்துக்காக ‘அவன் வாய்க்குழலில் அழகாக/ அமுதம் ததும்பும் இசையாக’ என விதந்தோதியிருப்பார்.

‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடல் உருவான விதத்தை இளையராஜா, வாலி குரல்களிலேயே இணையத்தில் கேட்டுப்பாருங்கள். வாலியின் ஆற்றல் புரியும். புதிய இயக்குநர்களுக்கும் சிறப்பான பாடல்களைத் தந்தார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் இடம்பெறும் ‘உனக்காக பொறந்தேனே எனதழகா’ எனும் பாடல் அதற்கான நற்சான்று. அப்பாடலின் ‘என்னை ஊசியின்றி நூலுமின்றி உன்னோடதான் தச்சேன்’ எனும் ஒரு வரி போதும், படத்தின் கதையைப் புரிந்துகொள்ள. மிகச் சமீபத்தில் சதீஷ் சக்ரவர்த்தியின் இசையில் அவர் எழுதிய ‘ஒருகிளி ஒருகிளி சிறுகிளி உன்னைத் தொடவே அனுமதி / ஒருதுளி ஒருதுளி வருகிறதே விழிவழி’ எனும் பாடலில் சலிப்பில்லாத சொற்களால் புகுந்து விளையாடியிருப்பார். சொற்களின் இளமையை மறவாதவர் என்பதால் வாலிபக் கவிஞர் எனும் அடைமொழி அவருக்கு மிகப் பொருத்தமே.

- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.

SCROLL FOR NEXT