அனைவரும் விரும்பும் தீபாவளி இந்த வருடமும் வரப்போகிறது. புத்தாடை பளபளக்க இனிப்புகளோடு மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கை என வழக்கம்போல் தீபாவளியை நாம் கொண்டாடப்போகிறோம். தூய்மை பாரதம் என்ற திட்டத்தை நம் பிரதமர் மோடி தொடங்கியுள்ள இந்த வேளையில், நாம் கொஞ்சம் யோசிக்கலாமா?
டெல்லியில் மட்டும் கடந்த ஆண்டு தீபாவளி அன்று சுமார் 6,000 டன் அளவுக்குக் குப்பைகள் சேர்ந்ததாக ஆய்வு ஒன்று கூறுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் தீபாவளிக்கு எவ்வளவு குப்பைகள் சேரும் என்று எண்ணிப்பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.
தைவான், சுவீடன், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்றவை முழுமையாகவோ பகுதியளவோ மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கைகளைத் தடைசெய்திருக்கின்றன. முன்னேறிய மேற்கத்திய நாடுகளைப் பல வகைகளில் நகலெடுக்கும் நாம் இதையும் நகலெடுக்கத் தயாரா?
இந்திய உச்ச நீதிமன்றம் அமைதியான உறக்கம் தனிநபரின் உரிமை என்று கூறியுள்ளது. மேலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கைகளை வெடிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 125 டெசிபல் சத்தத்துக்கு மிகாமல் வெடிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதை நாம் மதிக்கத் தயாரா?
பல்லாயிரக் கணக்கான குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கெடுத்து, அவர்களின் உடல்நலனைக் காவுகொடுத்து, கனவுகளைச் சிதைத்து உருவாக்கப்படுபவைதான் மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கை. அந்தக் குழந்தைகளின் முகங்கள் வேண்டுமானால் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் வெடிக்கும்போது வருவது அந்த வெடியை உருவாக்கிய குழந்தையின் அழுகைதான்.
ரெ. ஐயப்பன், ஆசிரியர்,
காந்தியடிகள் நற்பணிக் கழகம், கும்பகோணம்.