கருத்துப் பேழை பகுதியில், ‘மெல்லத் தமிழன் இனி!’ என்ற தொடர் கட்டுரை படித்தேன். இந்தக் கட்டுரை அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பாக ஒட்டப்பட வேண்டும். என்ன கொடுமை இது. குடி எத்தனை குடிமக்களின் குடியைக் கெடுக்கிறது என்பதைப் பார்க்கும்போது மனசு வலிக்கிறது.
குடி நோயாளிகள் என்ற புதுப் பெயர் வேறு. தமிழகத்தைத் தவிர, வேறு எங்கும் இத்தகைய போக்கு இருக்காது. மிகைப்படுத்தாமல் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரை, குடிமகன்களின் பரிதாப நிலையைக் காட்டுகிறது.
இனியாவது, தமிழகம் திருந்துமா என்பதைப் பார்க்க வேண்டும்.
- ஜீவன்.பி.கே.கும்பகோணம்.
விளையாட்டாக ஆரம்பித்த மதுப் பழக்கம் பல குடும்பங்களின் நிம்மதியை அழித்துவருகிறது. ஆணும் பெண்ணும் மது அருந்துவதில் சரிசமமாகப் போட்டி போட்டு வருகின்றனரோ என்ற ஐயம் எழுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாக இருந்துவிடக் கூடாதா எனப் பலர் நினைக்கின்றனர். இளைஞர்கள், முதியவர்கள் மட்டுமின்றி மாணவ, மாணவிகளும் போதைப் பழக்கத்தில் விழுந்தது கண்டு மனம் பதைக்கிறது.
கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்ட காலம் மாறி, கோயிலுக்கு மது அடிமைகளைக் கூட்டிச் சென்று மீட்கும் நிலை இருப்பது வேதனைக்குரியது.
- மு.மகேந்திர பாபு, கருப்பாயூரணி.