திமுக தலைவர் கருணாநிதி தொடர்பாக, ஜூன் 3 அன்று கருத்துப்பேழை கட்டுரைகளிலும், தலையங்கத்திலும் வெளியான கருத்துகள் சிறப்பானவை. ‘நெஞ்சுக்கு நீதி’யில் இடம்பெற்றிருந்த அவரின் முதல் கன்னிப்பேச்சு அனுபவத்தைப் பிரசுரித்தது இன்னொரு சிறப்பு. ‘தந்தை அல்ல; தலைவர்’ என்ற ஸ்டாலின் கட்டுரையில், தனது அரசியல் வாழ்விலும் அரசியலிலும் கருணாநிதியுடன் பெரும்பாலான நேரங்களை கழித்தவர் என்பதால் எத்தனையே நிகழ்வுகளை அவர் நம்முடன் பகிர்ந்திருக்கலாம். ஆனால், கடவுள் நம்பிக்கையாளர்களைப் புண்படுத்தக் கூடாது எனும் புரிதல், சட்ட மன்றத்துக்குத் தயாராக எடுத்துக்கொள்ளும் அக்கறை என்று கருணாநிதியின் சிறப்பியல்புகளையும் பண்புகளையும் பட்டியலிட்டது நன்று.
-வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
கொங்கைத் தீயல்ல... வெறியாட்டம்!
மறைந்த பறையிசைக் கலைஞர் ரெங்கராஜன் மறைவையொட்டி சி.கார்த்திகேயன் எழுதிய கட்டுரை மகத்தான அஞ்சலிக் கட்டுரையாக அமைந்தது. கட்டுரையில் சில விடுபடல்களும் இருந்தன. 1980-களில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் துணைவேந்தராக இருந்த முனைவர் வ.அய்.சுப்பிரமணியனின் சீரிய முயற்சியில் நாடகத் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் சே.இராமானுஜம், பேராசிரியர் கு.முருகேசன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் தஞ்சை மற்றும் தமிழகத்தைச் சுற்றியுள்ள மரபுக் கலைகளை ஆவணப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அச்சமயத்தில்தான் ரெங்கராஜன் குழுவினர் இனங்காணப்பட்டார்கள். மேலும் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதியின் ‘கொங்கைத் தீ’ நாடகத்தை பேராசிரியர் சே.இராமானுஜம் நெறியாளுகை செய்ததாகத் தவறான தகவல் தரப்பட்டுள்ளது. சே.இராமானுஜம் எழுதி, நெறியாளுகை செய்தது ‘வெறியாட்டம்’ நாடகம். அந்நாடகத்தில்தான் ரெங்கராஜனின் பறை நடனம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
-கே.எஸ்.கருணா பிரசாத், சென்னை.
கவிக்கோவுக்குப் புகழஞ்சலி
ஜூன் 4 அன்று கலை ஞாயிறு பகுதியில் கவிக்கோ அப்துல் ரகுமானைப் பற்றி கவிஞர் பழனிபாரதி எழுதிய கட்டுரை படித்தேன். கலில் ஜிப்ரானைப் போல கவிதை எழுதக்கூடியவர் என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பெற்றவர் கவிக்கோ. கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், ஜப்பானிய ஹைகூ வடிவம் பரவக் காரணமாயிருந்தவர். உருதுக்கவிஞர் இக்பாலின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். அவர் எழுதிய ‘ஏ..புத்தகங்களே... சமர்த்தாயிருங்கள். குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்’ என எழுதிய வரிகள் மிகப் பிரபலமானவை. ‘பூக்களில் மை தொட்டுப் புல்லாங்குழலால் எழுதியவர் மௌனமாகி விட்டார்’ எனக் கவிஞர் பழனிபாரதி குறிப்பிட்டிருந்தது கவிக்கோவுக்குச் செய்த புகழஞ்சலி.
-கு.மா.பா.கபிலன், சென்னை.