பொலிவியாவின் சோஷலிசத்துக்கான மாற்றமும், அதன் வளர்ச்சியும் ஒட்டுமொத்த மனித குலத்தின் வளர்ச்சியையும் விரும்பும் மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றன.
பல ஆண்டுகளாக அமெரிக்காவாலும், அதன் தாராளமயக் கொள்கைகைகளாலும் சுரண்டப்பட்ட அந்த நாடு, சோஷலிசத்துக்கான வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்த பின்பு, எண்ணெய் வளங்களைப் பொதுவுடமையாக்கி, கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகியவற்றில் அரசு முதலீட்டை அதிகரித்து குறுகிய காலத்தில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது ஈவோ மொராலிஸுக்கு ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, ஹியூகோ சாவேஸ், ரால்காஸ்ட்ரோ ஆகியோர் வழிகாட்டிய பாதை. அந்த சோஷலிசமே காலாவதியாகிவிட்டது என்று பரப்புரை செய்யும் மோடிக்கும், அவருக்கு வழிகாட்டிய தலைவர்களுக்கும் இந்தப் பாதையைப் பார்க்கும் மார்க்கம் இல்லை.
- சோ. சுத்தானந்தம்,சென்னை-44
நிலைநாட்டிய மொராலிஸ்
பொதுவாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்நாட்டுக் குழப்பங்களும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அதிகம் என்ற கருத்து உண்டு. பொலிவியா நாட்டைப் பற்றி நம்மில் பலர் அதிகமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தச் சூழலில், ‘பொலிவியாவைப் பாருங்கள் மோடி’ கட்டுரை புது வெளிச்சம் பாய்ச்சுகிறது. பொலிவியாவை முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து விடுவித்து மக்களுக்கான ஆட்சியை நிலைநாட்டிய மொராலிஸ் ஆச்சர்யமூட்டும் தலைவராக இருக்கிறார். குறிப்பாக, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திய விதம், இந்தியா போன்ற நாடுகளுக்கு ஒரு பாடம்.
- ப. சுகுமார்,தூத்துக்குடி-1.