வியாழன் அன்று வெளியான (22.06.17), ‘கட்டிட வரைபட அனுமதிக்கு 3௦ நாட்களில் அனுமதி கிடைக்காவிட்டால், கட்டிடப் பணியை உடனடியாகத் தொடங்கலாம் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவிப்பு’ என்ற செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. உண்மையில், இது புதிய அறிவிப்பே இல்லை. தமிழ்நாடு ஊராட்சி சட்டம் - பிரிவு 220(3), தமிழ்நாடு நகராட்சி சட்டம் - பிரிவு 202(2) மற்றும் தமிழ்நாடு மாநகராட்சி சட்டம் பிரிவு 277(2) ஆகியவற்றை வாசித்துப் பார்த்தால் இது புரியும்.
இப்பிரிவுகளின்படி, கட்டிட வரைபட அனுமதிக்கு மனு அளிக்கப்பட்டு, 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் அனுமதி கிடைத்ததாகக் கருதி இதர விதிகளுக்கு உட்பட்டு கட்டிடப் பணியைத் தொடரலாம். ஆக, அமைச்சரின் அறிவிப்பு புதிதல்ல, இருக்கிற சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தினால் மகிழ்ச்சி.
- பொ.நடராசன், நீதிபதி (பணி நிறைவு), உலகநேரி.
தெளிவோம் ஜிஎஸ்டி
ஜூன் 23 அன்று வெளியான, ‘அறிவோம் ஜிஎஸ்டி பகுதி’யானது தெளிவோம் ஜிஎஸ்டி என்பதுபோல எளிய விளக்கத்துடன் இருந்தது. பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தரும் விதத்தில் அமைந்த இப்பகுதி, தினந்தோறும் இடம்பெற வேண்டும். ஜிஎஸ்டி வரவால் தமிழகத்திலுள்ள வணிக சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ‘வணிகர் சங்கக் குரல்’ என்ற தலைப்பில் வெளியிட வேண்டும். ஜிஎஸ்டி சம்பந்தமான இணையதளங்கள், ஆப் (App) பற்றிய விவரங்களையும் வெளியிட்டு உதவ வேண்டும்.
- கே.ராஜா, சென்னை.
சுயமாக வாக்களியுங்கள்!
குடியரசுத் தலைவர் தேர்தலில், அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குரிமையானது அந்தத் தொகுதி மக்கள் அளித்த வாக்கில் இருந்து கிடைத்ததே. எனவே, அதனை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக எந்த ஒரு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது. நடக்கப்போவது ரகசிய வாக்கெடுப்பு. எனவே, இந்த வாய்ப்பை ஒவ்வொரு உறுப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாறாக, தமிழக மக்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட, வெறும் 3% வாக்குவங்கிகூட இல்லாத ஒரு கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமின்றி, கட்சிக்கும் தமிழகத்துக்கும் இழுக்காகவே அமையும்.
- சூர்யா முத்துகுமரன், குருங்குளம் மேல்பாதி.
விழிப்புணர்வு தேவை
ஜூன் 22 வெளியான ‘நாம் அருந்துவது நல்ல பால்தானா?’ கட்டுரை நாம் தினமும் அருந்தும் பாலின் பின்னால் உள்ள மறைமுக உண்மைகளை வெளிக்கொண்டுவருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருள் பால். அதில் உள்ள கலப்படங்கள், ரசாயனம் உடல் நலத்துக்கு நிச்சயம் தீங்கு விளைவிக்கக் கூடியது. இதனை சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை, உணவுத் தர நிர்ணய ஆணையம் ஆய்வுசெய்து உடனடி தடை விதிப்பதுடன், மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அழிந்துவருகிற நாட்டு மாடுகளைப் பாதுகாப்பதுடன், பாலின் தரத்தை உறுதிசெய்த பின்னரே மக்களைச் சென்று சேருமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலனில் அக்கறை கொண்டு தாமதிக்காமல், உடனடியாகச் செயல்பட வேண்டிய தருணம் இது.
- அலர்மேல்மங்கை, சென்னை.