இப்படிக்கு இவர்கள்

இப்படிக்கு இவர்கள்: தாய்மைப் பொருளாதாரம்!

செய்திப்பிரிவு

காந்தியப் பொருளாதார மேதை குமரப்பா, ஐந்து விதமான பொருளாதாரக் காரணிகளை விளக்கியிருக்கிறார். ஒட்டுண்ணிப் பொருளாதாரம்: தான் வாழப் பிறரை அழித்தல். உதாரணம்: ஆட்டைக் கொன்று புலி உண்ணுதல். சூறையாடும் பொருளாதாரம்: உற்பத்தியில் எந்தவிதப் பங்களிப்புமின்றி குறைந்தபட்ச வன்முறையில் ஈடுபடுதல். குரங்குகள் தோட்டத்து மரங்களில் காய்த்துள்ள பழங்களைச் சூறையாடுவது இதற்கு உதாரணம். தன்முனைவுப் பொருளாதாரம்: தனக்குத்தானே உழைத்து, அதனால் ஈட்டும் வருமானத்தில் மிகக் குறைந்த அளவே லாபம் வைத்து மற்றவர்களுக்காக வாழ்வது.

எ.கா. விவசாயிகள். கூட்டுறவுப் பொருளாதாரம்: பலரது கூட்டு முயற்சியினால் உழைத்து, தனக்கும் உபயோகமாக்கிக்கொண்டு, அதன் பலன் மற்றவர்களுக்கும் சேருமாறு பார்த்துக் கொள்வது. உதாரணம், தேனீக்கள். சேவைப் பொருளாதாரம் (தாய்மைப் பொருளாதாரம்): எந்தவிதப் பிரதிபலனும் பார்க்காமல், தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்காகச் சேவை செய்வதே சேவைப் பொருளாதாரம். தாய்மை நிலையை நோக்கி நகர்வதே ஒரு உண்மையான மனிதனின் வாழ்வின் லட்சியமாக இருக்க வேண்டும் என்பதே குமரப்பாவின் எண்ணமாக இருந்தது. (காந்தியை மிஞ்சிய காந்தியவாதி ஜன.5)

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

வதைக்கும் கட்டண உயர்வு

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கும் சேவைக்கான கட்டணத்தை, பன்மடங்காக உயர்த்தியிருக்கும் அறிவிப்பு (ஜன.7) வாகனங்களைப் புதிதாக வாங்குவோரை மட்டுமல்லாமல், ஏற்கெனவே வாங்கிய வாகனங்களின் உரிமங்களைப் புதுப்பிக்க உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். செப்பனிடப்படாமல் சிதைந்திருக்கும் சாலைகளைப் புதுப்பிப்பதில் அக்கறை காட்டாத மத்திய - மாநில அரசுகள், இந்தக் கட்டண உயர்வை முன் தேதியிட்டு வசூலிக்க வேண்டும் எனக் கூறியிருப்பது நியாயமற்ற செயல். கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்காமல், ஏற்றிக்கொண்டே போகும் மத்திய அரசை எதிர்த்து ஜெயலலிதா குரல் எழுப்பினார். அதேபோல, வாகன சேவைக் கட்டண உயர்வுக்கு எதிராக இன்றைய மாநில அரசு குரல் கொடுக்க வேண்டும்.

- கு.மா.பா.கபிலன், சென்னை.

தொடரும் புறக்கணிப்பு

எழுத்தாளர் சு.வெங்கடேசனின், ‘கிடப்பில் போடப்படுகிறதா கீழடி?’ (ஜன.5) கட்டுரை தமிழ் உணர்வைத் தட்டியெழுப்பியது. காவிரி, தமிழக மீனவர்கள், முல்லைப் பெரியாறு, புயல் வெள்ள நிவாரணம் என்ற வரிசையில், மத்திய அரசு கீழடி அகழ்வாராய்ச்சியையும் சேர்த்து நாம் புறக்கணிக்கப்படுகிறோம். நம் பண்டைய வாழ்க்கை முறையின் சிறப்புகளுக்குச் சாட்சியாக உள்ள கீழடி கண்டுபிடிப்புகளைக்கூட மறைக்க முயல்வது மன்னிக்க இயலாதது. அகழ்வாய்வுகளில் கிடைக்கும் அபூர்வ தகவல்களை வருங்காலத் தலைமுறைகளுக்குப் பாதுகாத்து வைக்க வேண்டிய மத்திய அரசு, இதில் பாகுபாடு காட்டுவது கொடுமை. ஆதிச்சநல்லூர், கீழடி எனத் தொடரும் புறக்கணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம்.

- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

ஊழலை ஒழிக்கும் வழி

மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி என்று சொல்வதுண்டு. அதிகாரிகள் மட்டும் விதிவிலக்கா என்ன? (‘உயரதிகாரிகள் ஊழல் மயமாவது ஏன்?’ ஜன.6). அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களை ஊடகங்கள் வெளிக்கொணர்ந்தாலும், அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில்தான், அதிகாரிகள் பகல்கொள்ளையில் துணிவுடன் ஈடுபடுகின்றனர். இதில் மாநில அதிகாரிகள், இந்திய ஆட்சிப் பணியாளர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் போய்விட்டது. ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்காமல் ஊழல் அதிகாரிகளை ஒழிக்க முடியாது.

- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

SCROLL FOR NEXT