‘எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா?’ கட்டுரையில் கட்டுரையாளர் கையூட்டு வாங்குகிறவர்களைப் பட்டியல் போட்டுக்காட்டப்போகிறார் என்று பார்த்தால், காமராசர், கக்கன், நல்லகண்ணு என்று வாங்காதவர்களின் சுருக்கமான பட்டியலைப் போட்டு, இவ்வளவுதான்யா சொல்ல முடியும் என்று நிறுத்திக்கொள்கிறார்.
ஜவாஹர்லால் நேரு, டெல்லியில் பொதுவாழ்வில் கையூட்டு புகாமல் தடுக்கச் செயல் திட்டம் தீட்ட ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, பம்பாயிலிருந்து ஸ்ரீபிரகாசாவை அந்தக் கூட்டத்துக்கு அழைத்திருந்தார். பிரகாசாவுக்கு ரயிலில் இடஒதுக்கீடு கிடைக்கவில்லை.
கையூட்டு கொடுத்தால் கிடைக்கும் என்பதை அறிந்து அவர் சிரித்தார். பிறகு, ஒரு முடிவுக்கு வந்தார். கையூட்டு கொடுத்து சீட்டு வாங்கிக்கொண்டு டெல்லி சென்றார். கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் அனைவரும் ‘நான் லஞ்சம் வாங்கவும் மாட்டேன், கொடுக்கவும் மாட்டேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நேரு கூறுகிறார்.
பிரகாசா ‘நான் லஞ்சம் வாங்க மாட்டேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். ஆனால், கொடுக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வதற்கில்லை. ஏனெனில், இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கே நான் லஞ்சம் கொடுத்துத்தான் வந்திருக்கிறேன்’ என்றார். நேரு அசந்துபோனார். அதற்காக நாம், இந்திய மண்ணையும் இதன் குடிமக்களையும் ஒட்டுமொத்தமாகக் குறை கூறி ஒதுக்கிவிட முடியாது.
‘எனக்குச் சொந்தமில்லாத, உழைத்துப்பெறாத ஒரு காசையும் என் விரலால் தொட மாட்டேன்’ என்று செயாலால் காட்டுகிற ஜெயகாந்தனின் ‘திருட்டுமுழி’ ஜோசப்பைப் போன்றவர்களின் முகவரிகள் நமக்குத் தெரியாமல் போனதற்காக அம்மாதிரி மனிதர்களே இல்லையென்று சொல்லிவிட முடியாது.
- கு.வெ.பாலசுப்பிரமணியன்,பேராசிரியர் (ஓய்வு), தஞ்சாவூர்.