ப. சோழநாடன் எழுதிய ‘கே.பி. சுந்தராம்பாள்: தமிழின் உச்சஸ்தாயி’ கட்டுரை படித்தேன். சிவாஜி கணேசனால் வீரபாண்டியக் கட்டபொம்மன் உள்ளிட்ட பல சரித்திர புருஷர்கள் உயிர்பெற்று உலா வந்தார்கள் என்றால், கே.பி. சுந்தராம்பாளால் உயிர்பெற்றவர் ஔவை மூதாட்டி.
அதற்கு ‘ஔவையார்’ படம் ஒன்றே உதாரணம். கட்டபொம்மனை வசனத்தால் உயிரூட்டினார் சிவாஜி என்றால், ஔவையாரைப் பாட்டால் உயிரூட்டினார் கே.பி.எஸ். பாடகர்களின் குரலை இசை ஆதிக்கம் செய்யும். அல்லது வார்த்தைகளில் தெளிவு இருக்காது என்ற நிலையை மாற்றி, உச்சஸ்தாயியில் பாடினாலும் தமிழ் அலங்காரத்தோடு நாட்டியமாடியது கே.பி.எஸ். நாவில்.
இன்றைய இளைய தலைமுறை விரும்பிக் கேட்கும் பழம் பாடகர் குரல் என்றால், அது கொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாள் குரல் மட்டுமே. இதற்குச் சரியான உதாரணம் ‘பிதாமகன்’ படத்தில் சிம்ரனைக் கடத்திக் கொண்டுபோய் ஆடச் செய்யும்போது ஒலிக்கும் ‘தகதகவென ஆடவா...' என்ற பாடலுக்குத் திரையரங்கில் எழுந்த ஆரவாரமே சாட்சி.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.