கூவம் சீரமைப்பு, சிங்காரச் சென்னை போன்ற சீரிய திட்டங்கள் தோற்றதற்குக் காரணம், மக்களின் பழக்க வழக்கங்களை ஒழுங்குபடுத்தாததே. எச்சில் துப்பும் வழக்கத்தை மெத்தப் படித்தவர்களும் விடவில்லையே. கங்கைக் கரையில் பிணங்களை எரிப்பதையும், எரிந்த அல்லது பாதி எரிந்த பிணங்களை ஆற்றில் தள்ளுவதையும் நிறுத்த முடியுமா? கொடிகட்டிப் பறக்கும் ஆயிரக் கணக்கான பண்டாக்களையும், அரை நிர்வாண சாமியார்களது எதிர்ப்பையும் முறியடிக்கும் சக்தி அரசுக்கு உண்டா.
மூட நம்பிக்கைகள், சுகாதாரமற்ற பழக்க வழக்கங்கள், சுற்றுப்புறத் தூய்மையைக் கெடுக்கும் போக்கு போன்றவற்றைச் சீர்திருத்தாது, கங்கையைத் தூய்மைப்படுத்துவது ஆற்றில் பணத்தைக் கொட்டுவதாகும். ஒன்றுபட்ட சோவியத் ஒன்றியத்துக்கு நான் சென்றிருந்தபோது 400 கி.மீ. நீளக் கால்வாய் சிறிதும் அசுத்தப்படாது ஆப்கன் எல்லையினின்று அஷ்காபாத்துக்கு அழகுற வளைந்து வளைந்து செல்வதைப் பார்த்து வியந்தேன். ஒரு மனிதரோ, விலங்கோ அக்கால்வாயில் குளிக்கவோ கழிக்கவோ செய்யவில்லை. புறப்பட்ட இடத்தினின்று சேரும் இடம்வரை எவ்வித அசுத்தமும் செய்யப்படாது நீர் பயணித்தது. அத்தகைய உணர்வையும் சமூக மனப்பான்மையும் வளர்க்கும் திட்டங்களில் முதலீடு செய்வதே முதன்முயற்சியாக இருக்க வேண்டும்.
- ச.சீ. இராஜகோபாலன், சென்னை-93