‘நீர், நிலம், வனம்’ தொடரில், ஊர்க் காதலர்கள்’ கட்டுரையை வாசித்து எங்கள் வட்டார மக்கள், மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறோம்.
திருச்செந்தூரில் வாழும் என்னைப் போன்ற 60 வயதைக் கடந்தவர்கள், இந்தப் பகுதியில் தொடரும் மத நல்லிணக்கத்தைக் கண்டு பெருமைகொள்கிறோம். திருச்செந்தூர் ஒரு இந்துத் தலம். திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வீரபாண்டியன்பட்டணம் - 95 விழுக்காடு கிறித்தவ சமுதாய மக்கள் நிறைந்த கடற்கரைக் கிராமம்.
அடுத்த இரண்டாவது கிலோமீட்டரில் காயல்பட்டணம் - 95 விழுக்காடு இஸ்லாமிய மக்கள் நிறைந்த ஊர். இவ்வாறு இந்து, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் மிக நெருக்கமாக வாழும் இந்தப் பகுதியில் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் அந்நியோன்னியமாக வாழ்ந்துகொண்டிருப்பதால் அமைதிப் பூங்காவாக, மகிழ்ச்சி பரவும் இடமாகத் திகழ்கிறது.
சில வீடுகளிலும், கடைகளிலும் திருச்செந்தூர் கோயில் கோபுரம், வீரபாண்டியன்பட்டணத்து தேவாலயம், காயல்பட்டினத்து மசூதி இவை ஒருங்கே உள்ள படங்களை நான் கண்டிருக்கிறேன். இந்த நல்லிணக்கம் இனிவரும் காலங்களிலும் என்றென்றும் தொடரும்.
திருச்செந்தூர். - அ. பட்டவராயன்,