‘கட்டை வண்டியும் டயர் வண்டியும்’ என்ற கிராமஃபோன் கட்டுரை படித்தேன். 1970-களில் பள்ளி விடுமுறைக் காலத்தில் நானும், என் அண்ணனும் சென்னையிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் கரந்தாநேரி கிராமத்தில் உள்ள எங்கள் தாத்தா வீட்டுக்குச் செல்வதுண்டு.
அங்கு பயணம் செய்வதற்காக, வில்வண்டி என்ற மாட்டுவண்டி எப்போதும் நிற்கும்.என் அண்ணனுக்கு வில் வண்டியை ஓட்ட வேண்டுமென்று ஆசை.
தாத்தா வீட்டில் இல்லாத ஒரு நாளில் அண்ணன் வண்டியில் மாடுகளைப் பூட்டி ஓட்டினான். நானும் சென்றேன். மாடுகள் தாறுமாறாக ஓடியதால், ஊர்க் குளக் கரையிலுள்ள மரத்தின் மீது முட்டி, வண்டி சரிந்து கீழே விழுந்துவிட்டோம்.
இதையறிந்து ஓடிவந்த எங்கள் தாத்தாவுக்கு வண்டி ஓட்டும் நாராயண நாடார், வண்டியையும் காளை மாடுகளையும் பார்த்து இடக்கால்-வலக்கால் மாறியிருக்கிறது என்றார்.
ஒரு மாட்டை இடப்பக்கமும் மற்றொரு மாட்டை வலப்பக்கமும் பழக்கியிருப்பார்கள். இது தெரியாததால்தான் குளக்கரை குட்டிக்கரணம். அதை நினைத்தால் இன்றும் எங்களுக்குச் சிரிப்புதான். பழைய ஞாபகத்தைத் தட்டியெழுப்பிய கட்டுரையாளருக்கு நன்றி.
பி. ஆறுமுகநயினார்,சென்னை