‘நல்ல தமிழ் எது?’ கட்டுரை படித்தேன். தற்போதைய தேவை அன்றாட வாழ்வில் மக்கள் அனைவரும் தமிழில் பேச வேண்டும் என்பதே ஒழிய, இலக்கணம் தவறாமல் பேச வேண்டும் என்பதில்லை.
தவறுதலாகவாவது, தமிழில் பேச மாட்டார்களா என்று நினைக்கத் தோன்றுமளவுக்கு மோசமாகிவிட்ட நிலையில், இலக்கணப் பிழைபற்றி எங்கே பேசுவது? பிற மொழி கலவாமல் பேச முயற்சித்தாலே போதும் தமிழ், நல்ல தமிழ் என்றாகிவிடும். தமிழில் பேசும் ஆர்வத்தை மக்களிடத்தில் விதைத்துவிட்டாலே போதும், இலக்கியங்களைக் கற்கும் ஆர்வம் தோன்றிவிடும்.
இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டால், கற்பாரைப் பிணிக்கும் தன்மைத்தான தமிழ், கற்போரைத் தன்னைவிட்டு அகல விடாது என்பது திண்ணம். அப்போது மக்கள் பேசும் தமிழ், கலப்பற்ற, உண்மையான, நல்ல தமிழாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
- அ. மயில்சாமி,கண்ணம்பாளையம்.