உலகச் செய்திகள் மற்றும் அகில இந்தியச் செய்திகளை வெளியிடும் நல்ல தமிழ் நாளிதழ் இல்லையே என்ற தமிழ் மக்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் ‘தி இந்து’ வெளிவந்துள்ளது.
வெளிவந்த ஒரு ஆண்டிலேயே மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டது. சீரிய நடை, தெளிவான கட்டமைப்பு, நடுநிலை தவறாத தலையங்கம், வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களின் கட்டுரைகள், சமூகக் கடமையுடன் வெளியிடப்படும் கட்டுரைகள், மனித இனத்துக்கு உதவும் நல்ல மனிதர்களைப் பற்றிய இரண்டாம் பக்கச் செய்திகள், வாசகர்கள் பங்கேற்கும் கருத்துச்சித்திரம் என ஒவ்வொரு பக்கமும் சுவை சேர்க்கிறது.
ஒவ்வொரு நாளும் வெளிவரும் வெற்றிக்கொடி, நலம் வாழ, இயற்கை நலம், மாயா பஜார் போன்ற இணைப்புகள் பாதுகாக்க வேண்டியவை. நாளிதழில் வாசகர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை ஏற்று, திருத்திக்கொள்ளும் பாங்கு போற்றப்பட வேண்டியது.
தமிழக இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி. இவை எல்லாவற்றையும் விட, உலகச் செய்திகள் அனைத்தையும் எளிய தமிழில் பாமரனுக்குக் கொண்டுசேர்ப்பதன் மூலம் தமிழ் வளர்க்கும் ‘தி இந்து’ நாளிதழின் தொண்டு காலங்கள் கடந்தும் தொடரட்டும்.
- இரா. சுரேஷ் குமார்,ஆய்வாளர், வருமான வரித் துறை, திருச்சி.