ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் ஆளுநராகப் பதவி ஏற்றுக்கொண்டதை, ‘தவறான முன்னுதாரணம்’ என்று கே.சந்துரு தனது கட்டுரையில் மிகச் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக, ஒருவர் ஆளுநராக நியமனம் செய்யப்படுகிறார் என்றால், அவர் ஆளும் கட்சி உறுப்பினராகவோ, அக்கட்சிக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவராகவோ, அக்கட்சிக்கு வேண்டியவராகவோ அல்லது அக்கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுடையவராகவோதான் பார்க்கப்படுகிறார்.
எனவே, நீதிபதி சதாசிவம் ஆளுநர் பதவியிலிருந்து விலகி நின்றிருந்தால், தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்திருக்கலாம். எதிர்காலத்தில் நீதித் துறையின் சுதந்திரத்தைப் பேணுவதற்குப் புதிய விழுமியங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கட்டுரையாளர் வலியுறுத்துவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதிலும் அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளை நடைமுறைப்படுத்துவதிலும் நீதித் துறையின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
- மருதம் செல்வா,திருப்பூர்.