அரசுப் பள்ளிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பொதுப்புத்தி அபிப்ராயர்கள் தங்கள் எண்ணங்களை மறுபரிசீலனை செய்யும்படி வெளியாகியிருக்கின்றன மேனிலைத் தேர்வு முடிவுகள். இந்த முடிவுகள் மகிழ்ச்சிகரமானவை. அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்ற வாதத்தை முறியடிக்கின்றன. மதம், சாதி, பொருளாதாரம் போன்ற எந்த விஷயங்களையும் கருத்தில் கொள்ளாது அரசுப் பள்ளிகள் மாணவர்களை அரவணைத்துக்கொள்கின்றன.
அரசுப் பள்ளிகளின் தரமின்மைக்கு ஆசிரியர்களே காரணம் என்றொரு எண்ணம் இங்கே நிலவுகிறது. 1978-ல் சுயநிதிப் பள்ளிகளுக்கு அனுமதியளித்தபோது அரசுப் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கும், புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கும் தடைவிதிக்கப்பட்டது. உட்கட்டமைப்பு வசதிகளுக்கான ஒதுக்கீடும் நிறுத்தப்பட்டது.
தொடக்கப் பள்ளிகளில் வகுப்புவாரியாகப் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டும் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்று இல்லாது, ஐந்து வகுப்புகளுக்கு இரண்டு ஆசிரியர்களே என்ற நிலை உருவானது. அரசுப் பள்ளிகள் புதிய பரிமாணங்கள் அடைய முடியாமல் இருப்பதற்கு அரசின் கல்விக் கொள்கையும் அலட்சியமுமே காரணம். அம்பு எய்திட வேண்டிய இலக்கு வேறு!
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
தேர்தல் வாக்குப் பதிவு: எதிர்பார்ப்பும் எதார்த்தமும்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்திருக்கிறது. 100% வாக்குப் பதிவை எட்ட வேண்டும் என்ற இலக்கில் தேர்தல் ஆணையம் பயணித்தது. தேர்தல் விழிப்புணர்வுப் பிரச்சாரம் உள்ளிட்ட ஏராளமான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இருந்தும், 71% வாக்குகள்தான் பதிவாகியிருக்கின்றன. என்ன காரணம்? திருமணம் முடிந்து கணவரின் ஊரில் இருக்கும் பெண்ணுக்குப் பெற்றோரின் ஊரில் வாக்கு இருந்தால் அவர்கள் பெரும்பாலும் வாக்களிக்க வருவதில்லை.
தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றவர்களுக்கு சொந்த ஊரில் வாக்கு இருந்தாலும் இதே நிலைமைதான். சில இடங்களில் வாக்குச் சாவடிக்காகத் தொலைதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. கிராம நிர்வாக அலுவலகத்தோடு இணைந்து இறப்புப் பதிவின் பதிவேட்டைப் பெற்று அவர்களின் பெயர்களையும், இரட்டை வாக்குரிமையையும் நீக்க வேண்டும்.
வாக்குச் சாவடிக்குச் செல்ல முடியாத முதியவர்கள், நோயாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். இவற்றையெல்லாம் களையும் பட்சத்தில் நிச்சயமாக வாக்கு சதவீதம் கணிசமான அளவில் உயரும். இது தொடர்பான விழிப்புணர்வுகளைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியதும் தேர்தல் ஆணையத்தின் கடமைதான்.
- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.
நினைவில் நிற்கும் நோத்ர தாம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நோத்ர தாம் தேவாலயம், தீப்பற்றி எரிந்துபோனதைத் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளும் காணொலிகளும் வெளியாகியிருக்கின்றன. ‘இந்து தமிழ்’ நாளிதழில் ஏப்ரல் 19 அன்று வெளியான ஷங்கர்ராமசுப்ரமணியனின் ‘எரிந்துபோன பாரிஸின் இதயம்’ எனும் கட்டுரைதான் இதுவரை வெளியான கட்டுரைகளிலேயே சிறப்பானது என்பேன்.
பாரிஸின் இதயம் எரிந்துபோனது எனும் தலைப்பில் தொடங்கி, விக்டர் ஹ்யூகோ, சுந்தர ராமசாமி, பமேலா ட்ரக்கர் மேன், வெ.ஸ்ரீராம், மெக்ரான் என இக்கட்டுரை அபாரமான இடங்களைத் தொட்டுச்சென்றிருக்கிறது. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடந்த துயரத்தை நமது துயரமாக உணரச்செய்தது.
- ஜெயசீலன், சிவகாசி.
சமூகத்திலிருந்து தங்களைத் துண்டித்துக்கொண்ட நகரவாசிகள்
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவில் இந்த முறையும் நகர்ப்பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. சென்ற முறை இப்படி நேர்ந்தபோது அது சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளானதோடு நின்றுவிட்டது. நகர்ப்புறங்களில் வாக்குப் பதிவு குறைவாக இருப்பதற்கு முதன்மையான காரணம், அவர்கள் சமூகத்திலிருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டிருப்பதுதான்.
இன்னும் நேரடியாக வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அவர்கள் சுயநலத்தோடு இருப்பதுதான். இந்தச் சுயநலம் சார்ந்த உணர்வே வெவ்வேறு தருணங்களில் சமூக அவலமாக வெளிப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் அவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக இருப்பது புரியவரும். சமூகத்தை அரசியல்மயப்படுத்தவும், சமூகம் சார்ந்து தனிமனிதன் இயங்கவும் ‘இந்து தமிழ்’ நடுப்பக்கங்கள் முக்கியத்துவம் கொடுத்து எழுதிவருகின்றன. இன்னும் ஆழமான உரையாடலை நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், நாமக்கல்.
கலைஞனுக்கு சாதி ஏது?
ஏப்ரல் 21 அன்று வெளியான ‘வானவில் அரங்கம்’ பகுதியில் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எம்.என்.நம்பியாரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து சில பக்கங்களை மொழிபெயர்த்து வழங்கியிருந்தது சிறப்பு. கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை. ஆனால், அந்த வறுமைதான் ஒரு கலைஞனை நமக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறது.
பிழைப்புக்காக நாடகக் கம்பெனியில் சேர்ந்து அவர் பட்ட துயரங்களைப் படிக்கும்போது எம்.என்.நம்பியாரின் மீது மேலும் மதிப்பு உயர்கிறது. அவரது இயற்பெயரைக் கொண்ட இன்னொரு நடிகரும் இருந்தார் என்பதாலேயே அவர் குடும்பப் பெயரைச் சேர்த்துக்கொண்டார் என்று குறிப்பிட்டிருப்பது முக்கியமானதொரு பதிவு. கலைஞனுக்கு சாதி ஏது?
- தாமரை செந்தில்குமார், தாம்பரம்.