சா. தேவதாஸ் எழுதிய ‘பகத் சிங்: பாரதத்தின் சிங்கம்!’ என்ற கட்டுரை படித்தேன். அப்போது, பகத்சிங் எழுதிய ‘நான் நாத்திகன் - ஏன்?’ நூலின் ப. ஐீவானந்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து படித்த சில வரிகள் என்னுள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
‘நான் கஷ்டநிஷ்டூரங்களைத் தைரியமாக எதிர்த்து நின்ற நாத்திகர்கள் பலரைப் பற்றிப் படித்திருக்கிறேன். ஆதலால், தூக்குமேடையில் கூட ஆண்மையுள்ள மனிதனைப் போல் தலை நிமிர்ந்து நிற்கவே முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.
நான் எவ்வாறு நாத்திகத்தை அனுஷ்டிக்கிறேன் என்று கூறுகிறேன். ஒரு நண்பர் பிரார்த்தனை செய்யும்படி என்னை வேண்டிக்கொண்டார். நான் எனது நாத்திகத்தைப் பற்றி பிரஸ்தாபித்தேன். அப்பொழுது அவர் ‘உனது கடைசி நாள்களில் நீ நம்பிக்கை கொள்ள ஆரம்பித்துவிடுவாய்’ என்றார்.
நான் அவரிடம், ‘அன்பார்ந்த ஐயா!, அப்படி நேரவே நேராது. அவ்வாறு நம்புவது, என்னை அகவுரவப்படுத்தி, அவமானப்படுத்துவதாகவே நினைப்பேன்.
பலவீனத்தால், சுயநலநோக்கங்களால், நான் பிரார்த்தனை செய்யப்போவதில்லை’ என்று சொன்னேன். வாசகர்களே, நண்பர்களே… இது அகங்காரமாகுமா, அகங்காரம்தானென்றால் நான் அப்படிப்பட்ட அகங்காரத்தையே விரும்புகிறேன்.’
- பாண்டி சுப்பைய்யா,மின்னஞ்சல் வழியாக…