இப்படிக்கு இவர்கள்

இப்படிக்கு இவர்கள்: பாடநூல்கள் அல்ல… பாடத்திட்டமே முக்கியம்!

செய்திப்பிரிவு

பாடநூல்கள் அல்ல… பாடத்திட்டமே முக்கியம்!

மேனிலைத் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள் பற்றிய ஆசிரியர்களின் கருத்துகள் நம் இன்றைய கல்விமுறையின் பெருங்குறையினைச் சுட்டுகின்றது. பாடநூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் முன் அங்கீகரிக்கப்பட்ட தனியார் வெளியீடுகளினின்று பள்ளிகள் தம் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம். ஒரு பாடத்திட்டம், பல நூல்கள் என்ற நிலையில், பாடத்திட்டத்தை மையப்படுத்தி வகுப்பறைக் கற்பித்தல் நடைபெறும். பொதுத் தேர்வு வினாத்தாள்களும் எந்தப் பாடநூலையும் சாராது பாடத்திட்டத்தை ஒட்டியே இருக்குமாதலால், எத்தகைய வினாவினையும் மாணவர் எதிர்கொள்ளும் வகையில் வகுப்பறைக் கற்பித்தல் அமையும். அன்றைய மாணவர் பெரும்பாலோர் முதல் தலைமுறையாகப் பள்ளிக்கு வந்தவர்கள். அவர்களால் எத்தகைய வினாவினையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருந்த நிலை மாறி, சிறு மாற்றத்தைக்கூட ஏற்க இயலாது உள்ள நிலையை முன்னேற்றமாகக் கருத முடியாது. பாடநூலினின்று விலகி, பாடத்திட்டத்தைப் புரிந்துகொண்டு கற்பித்தல் நடைபெறும்போதுதான், தனிப் பயிற்சி ஏதுமின்றி எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாணவர் விளங்குவர். வாழ்க்கையிலும் அது பிரதிபலிக்கும்.

- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.

குழந்தைகள் விளையாடாமல் இருப்பதற்கு நாம்தான் காரணம்

ஜனவரி-24 அன்று வெளியான சுமிதா ராணியின் குழந்தைகள் விளையாட்டு தொடர்பான கட்டுரை படித்து அதில் ஒன்றிப்போனேன். மத்தியக் கிழக்கு நாடுகளில் வசிக்கும் எனது உறவினரின் குழந்தைகள் பலரும் விடுமுறையில் ஊருக்கு வரும்போது கட்டற்ற சுதந்திரத்தோடு இங்கு மண்ணில் உருண்டு புரள்வதை அவதானித்திருக்கிறேன். நவீன விஞ்ஞான விளையாட்டுக் கருவிகள், செல்போன்கள் கெடுத்தது குழந்தைகளின் மனதை மட்டுமல்ல, உடலையும்தான்! தெருக்களில் கூச்சலிட்டு விளையாடித் திரியும் அந்தத் துள்ளல் நிறைந்த குழந்தைப் பருவம் தொலைந்துபோனதை ஒருவித நெருடலோடு மனம் அசைபோடுகிறது. நமக்குக் கிடைத்தது நம் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லையே என்பது ஏக்கம் மட்டுமில்லை... ஏமாற்றமும்கூடத்தான்!

- கே.எஸ்.முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.

குறைந்தபட்ச மாத ஊதியம் சட்டமாகுமா?

பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்க ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை ஊதியம் வழங்குவதில் தவறில்லை. அதேபோல, தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஊதியம் 18,000 கிடைக்க சட்டம் இயற்றி அமல்படுத்த மத்திய அரசு ஆர்வம் காட்ட வேண்டும். உரிய ஊதியம் வழங்கி அனைத்து தொழிலாளர்களும் கௌரவமாக வாழ ஆளும் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சு.பாலகணேஷ், மாதவன்குறிச்சி.

கைவிடப்பட்டவர்களும் குரலற்றவர்களே!

2021-ல் எடுக்கப்படவுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படவுள்ளது மகிழ்ச்சியே. ஓரிடம் நில்லாது பல இடங்களுக்கும் தம் குடியிருப்பை மாற்றிக்கொள்ளும் நாடோடிகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்ட வேண்டியது அவசியம். அதோடு, மனநலம் குன்றி ஆங்காங்கே கேட்பாரற்றுத் திரியும் மனநோயாளிகள், கைவிடப்பட்டு ஆதரவின்றி அலையும் பெற்றோர்கள், பொதுமருத்துவமனைகளில் காணப்படும் ஆதரவற்றோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அடைக்கலம் கொண்டோர், முகவரி ஏதுமின்றி முதியோர் இல்லத்தில் வாழ்ந்துவரும் முதியவர்கள் ஆகியோர் பற்றிய விவரங்களையும் திரட்டி முறைப்படுத்துவதே முழுமையான, துல்லியமான கணக்கெடுப்பாகும். இவர்களும் குரலற்றவர்களே!

- கே.ராமநாதன், மதுரை.

SCROLL FOR NEXT