‘உலகம் சுற்றும் வாலிபன்’ பற்றிய மஹாரதியின் நினைவுகளில் என்னை நானும் இழந்துபோனேன். 70-களில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட அந்தப் படத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பார்க்காத இளைஞர்களே அக்காலத்தில் இருந்திருக்க மாட்டார்கள்.
அதுபோலவே அப்படத்தைப் பார்த்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அனுபவம் கட்டாயம் இருக்கும். எங்கள் ஊரில் 1974-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில்தான் எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபன் வெளியாகப்போகும் தேதியை அறிவித்தார்.
ஒரு அடை மழை நேரத்தில் திருச்செந்தூரில் அப்படத்தை பார்த்ததும் நினைவில் உள்ளது. மீண்டும் மீண்டும் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத அப்படம், இப்போது திரையிட்டாலும் வெற்றிகரமாக ஓடும்.
கட்டுரையாளர் சொன்னதுபோல இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர் இல்லாத அக்காலத்தில் திரையரங்குகள் மட்டுமே மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமாக இருந்தது.
திரையரங்குகள் குறித்துப் பல விமர்சனங்கள் இருந்தபோதிலும், மக்களின் உணர்வுகளை ஒன்றிணைக்கும் இடமாக அது இருந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இன்று அது எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்பதில் சொல்ல முடியாத சோகம் நெஞ்சை அழுத்துகிறது.
- கே. எஸ். முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.