பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் சென்னையில் சிகிச்சை பெறும் மும்பை இளைஞருக்குப் பொருத்தப்பட்ட செய்தி நெகிழவைத்தது. தனியார் மருத்துவமனை, வசதியான நோயாளி, பணத்துக்குத்தான் மருத்துவர்கள் வேலைசெய்கிறார்கள் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... ஒரு உயிரைப் பிழைக்கவைத்துவிட்டார்களே, எப்பேர்ப்பட்ட பணி இது!
மருத்துவர்கள் பணத்துக்காக ஓடுகிறார்கள், மருத்துவச் சேவையைப் பணம் சூழ்ந்துவிட்டது என்றெல்லாம் பேசுபவர்களும் எழுதுபவர்களும் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். மருத்துவர்களும் இந்தச் சமூகத்தின் அங்கம்தான். அவர்கள் வானத்திலிருந்து குதிப்பவர்கள் அல்ல. பணத்தின் பின் ஓடுபவர்கள் எல்லாத் துறைகளிலும் இருப்பதுபோல, இங்கும் இருக்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த மருத்துவத் துறையையும் சாடுவது எந்த விதத்தில் நியாயம்?
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கோட் சூட் போட்டுகொண்டு, மைக்கைப் பிடித்துவிடுவதாலேயே தொகுப்பாளர்கள் பேசுவதெல்லாம் உண்மை ஆகிவிட முடியாது. சமூகத்தில் எளிய இலக்குகளான மருத்துவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களைக் குறிவைக்கும் தொலைக்காட்சிகளால் ‘எல்லோரையும்’ கேள்வி கேட்டுவிட முடியுமா? அதற்கான திராணி உண்டா? டிஆர்பி ரேட்டிங்குக்காகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வரவழைக்கப்படுபவர்கள் எப்படியெல்லாம் ‘நடிக்க வைக்கப்படுகிறார்கள்’ என்பது யாருக்கும் தெரியாதா? அதெல்லாம் ஊழல் இல்லையா?
- செ. சிவநேசன், புதுக்கோட்டை.