நாசர் எழுதிய ‘மனதில் நிறைந் திருக்கும் மதறாஸ்!’ என்ற கட்டுரை படித்தேன். சிறந்த நடிகராகவும் இயக்குநராகவும் அறியப்பட்ட நாசர் இந்த கட்டுரை மூலம் சிறந்த எழுத்தாளராகவும் பரிணமித்திருக்கிறார். புதிய எழுத்தாளர் ஒருவரை வாசகர் களுக்கு அறிமுகப்படுத்திய ‘தி இந்து' நாளிதழுக்கு நன்றி! நாசர் வயதையொத்தவர்கள்தான் பழைய மதறாஸையும், நவீன மதறாசையும் இனம்பிரித்துக் காட்ட முடியும். இப்போது 60 வயதில் இருப்பவர்கள் சென்னையில் மவுண்ட் ரோடு பகுதியில் ‘டிராம்' ஓடிய தண்டவாளங்களைப் பார்த்திருப்பார்கள்.
இன்றைய இளம் தலைமுறையினர் சென்னையில் ‘டிராம்' என்ற ரயில் சென்னை நகர் வீதிகளில் ஓடியது என்பதையே நம்ப மாட்டார்கள். நாசரின் அனுபவத்தின்படியும் கணிப்பின்படியும் சென்னை தன்னை நாடி வந்தவரை வாழவைக்கும் நகரம் என்பதில் சந்தேகமில்லை. சென்னைதான் எனது பூர்விகம் என்று சொல்லக்கூடியவர்கள் மிகச் சிலரே. வழி தெரியாமல் திகைத்து நிற்பவர்களுக்குச் சென்னைவாசிகள் அவர்களின் சென்னைத் தமிழில் அங்க அசைவுகளோடு வழி சொல்லும் அழகே அழகு!
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட வடபழனியின் பிரதான சாலைகள் மரங்கள் அடர்ந்த சோலையாகத்தான் இருந்தது. இப்போது சென்னையின் பல பகுதிகள் நவீனப்படுத்தப்பட்டுவிட்டன. இன்னும் 50 ஆண்டுகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நகரங்கள்கூட சென்னை நகர எல்லைக்குள் வந்துவிடும்.
- கே.பி.எச். முகம்மதுமுஸ்தபா, திருநெல்வேலி.