முனைவர் சௌந்தர மகாதேவன் எழுதிய ‘காணாமல் போகும் கடித இலக்கியம்' கட்டுரை கண்டேன். மு.வ., புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், ,கி.ரா, வண்ணதாசன் ஆகியோரின் கடித இலக்கியச் சிறப்புகளை எடுத்துரைத்துள்ள ஆசிரியரின் பார்வைக்கு, ரசிகமணி டி.கே.சி, கு.அழகிரிசாமி, தி.க.சி. ஆகியோர் எழுதிய இலக்கியக் கடிதங்கள் வராமற் போனது ஆச்சரியமாக இருக்கிறது.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மக்சிம் கார்க்கி எழுதிய கடிதங்கள் அத்தனையும் இலக்கியத் தரம் வாய்ந்தவை என்று சொல்லப்படுகிறது. கடித இலக்கியத்தை வளர்க்கும் பணியில் ஆர்வம் கொண்டிருந்தவர்களில் ரசிகமணி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன் ஆகியோர்களை முக்கியமாகச் சொல்லலாம். 1960-ம் ஆண்டில், கி.ராஜநாராயணனும், தீப.நடராஜனும் (ரசிகமணியின் பேரன்) கையெழுத்துக் கடிதப் பத்திரிகை ஒன்றை நடத்தத் திட்டமிட்டார்கள். இதற்கு கு.அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, கி.ராஜநாராயணன், தீப.நடராஜன், நா.பார்த்தசாரதி மற்றும் நான் ஆகிய எட்டு பேர்தான் இக்கையெழுத்துக் கடிதப் பத்திரிகையின் ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள். இக்கடிதப் பத்திரிகைக்கு
‘ஊஞ்சல்' என்று பெயர். இந்த ‘ஊஞ்சல்' கடிதம் ஒவ்வொருவரிடம் செல்லும்போது, அதற்குப் பதில் கடிதம் ஒன்றும், சொந்தக் கடிதம் ஒன்றும் எழுத வேண்டும். இவ்வாறு ஏழு பேரிடமும் சென்று இறுதியில் கி.ரா-விடம் வந்து சேரும்போது ஓர் இதழ் நிறைவுபெற்றதாக அர்த்தம். ஊஞ்சலுக்கு உந்துவிசையாக இருந்து உற்சாகமாகக் கடிதம் எழுதியவர்களில் தி.க.சி-க்கும், வல்லிக்கண்ணனுக்கும் நிறைய பங்கு உண்டு.
- தர்மசம்வர்த்தினி, பாளையங்கோட்டை.