‘கிறிஸ்தவர்கள் இல்லாத அரபு உலகமா?’ கட்டுரை படித்தேன். கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒரே பிரதேசத் திலிருந்து தோன்றிய மதங்கள்தான். தன்னைச் சந்திக்க வந்த கிறிஸ்தவப் பாதிரிமார்களை, நபிகள் நாயகம் (ஸல்) அன்போடு வரவேற்று உபசரித்தார் என்பது வரலாறு. கிறிஸ்தவம் தோன்றிய காலத்தில் சிறந்த அறிவியல் கருத்துகளும் மருத்துவமும் அரபு நாட்டில் பரவியது.
இஸ்லாம் தழைத்தோங்கிய காலத்தில் கணிதம், வானசாஸ்திரம் போன்றவை உலகம் முழுவதும் பரவின. இஸ்லாமிய கலாச்சாரமும் கிறிஸ்தவக் கலாச்சாரமும் ஒன்றோடொன்று இணைந்திருந்தன என்றே சொல்லலாம். அரசியல் காரணமாகவே இரண்டு மதங்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மோதல்கள் ஏற்பட்டன. அந்த நிலை இன்றளவும் தொடர்வது சரியல்ல. இப்போதும் பெரும்பாலான அரபு நாடுகளில் கிறிஸ்தவர்கள் மதச் சுதந்திரத்தோடு வாழ்வது அரபு நாடுகளின் மதச் சகிப்புத்தன்மைக்குச் சான்றாக இருக்கிறது.
நான் புனித மக்காவுக்குப் பயணம் செய்தபோது, நான் பயணம் செய்த விமானத்தில் தமிழ்நாட்டிலிருந்து வந்து அரபு நாட்டில் ஊழியம் செய்யும் சில கிறிஸ்தவக் கன்னிமார்கள் பயணம் செய்து ‘தமாம்’ விமான நிலையத்தில் இறங்கியதைக் கண்டேன். கிறிஸ்தவர்களே இல்லாத இஸ்லாமிய நாடு உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். செயல்பட்டுவருவதைப் பெரும்பாலான அரபு நாடுகள் ஆதரிக்கவில்லை என்பதுதான் உண்மை.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி-7.