சர்வதேச அளவில் இரண்டு எண்கள்தான் தனி நபர் பெயர்கள் சூட்டப்பட்டவை. ஒன்று 1729 என்ற ராமானுஜன் எண்; மற்றது கட்டுரையாளர் (‘தி இந்து’ ஆக.25) குறிப்பிட்டுள்ள 6174 என்ற காப்ரேகர் எண்ணாகும். காப்ரேகர் எண்களோடு வாழ்ந்தார், விளையாடினார், நேசித்தார். மற்றவர்களையும் எண்களோடு காதலுறச் செய்தார். ஒரு முறை கோவை வந்தபோது அவரைப் பல கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு பெற்றேன்.
ஒரு பொறியியல் கல்லூரியில் அவர் மேடை ஏறியவுடன் சர்க்கஸ் கோமாளி போன்ற தோற்றத்தைக் கண்ட மாணவர்கள் கேலிச்சிரிப்பு சிரித்தனர். மூன்றே மூன்று நிமிடங்களில் அவர்களை எண்களால் கட்டிப்போட்டு ஒவ்வொரு எண் வரிசையின் விநோதங்களையும் அவர் காட்ட,அறை முழுவதும் மகிழ்ச்சி ஆரவாரத்தால் நிரம்பியது. மிக எளிய மனிதர். பணிவு மிக்கவர். எண்களோடு தனது தொடர்பை உயிருள்ள வரையில் விடவில்லை. அவரது நூல்களை மறுபிரசுரம் செய்வதே அவருக்குச் செய்யப்படும் நிறைவான அஞ்சலி. இக்கட்டுரை மூலம் அவரை நினைவூட்டிய ‘தி இந்து’ இதழுக்கு நன்றி!
- ச.சீ. இராஜகோபாலன், சென்னை-93