இப்படிக்கு இவர்கள்

இப்படிக்கு இவர்கள்: கருணாநிதியின் பெயரைச் சொல்லும் நாமக்கல் கவிஞர் மாளிகை!

செய்திப்பிரிவு

கருணாநிதி 1970-களில் முதல்வராக இருந்தபோதுதான் தற்போதைய தலைமைச் செயலகத்தின் அருகே இயங்கிவரும் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டப்பட்டது. அதற்கு முன் அந்த இடத்தில் அண்ணா அரங்கம் இருந்தது. இடப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, அந்த இடம் ராணுவத்திடமிருந்து பெறப்பட்டது. அந்த இடத்தில்தான் பல்வேறு துறைகளுக்கான பத்து மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது.

 கட்டுமானப் பணிகள் தொடங்கியதிலிருந்து முடியும் வரை, தலைமைச் செயலகம் வரும் முதல்வர் கருணாநிதி வார விடுமுறை நாட்களில் மேற்பார்வையிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். கட்டுமானப் பொறியாளர்களிடம் ஆலாசனைகள் சொல்வார். மிகவும் திட்டமிட்டுக் கட்டப்பட்ட அந்தப் பத்து மாடிக் கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் துறைச் செயலாளர், அலுவலர்களுக்கான அறைகளோடு பணியாளர்களுக்கான உணவறை, கழிப்பறை வசதிகளும் உள்ளடங்கியிருந்தன. பத்தாவது தளத்தில் அனைத்துக்

கட்சிக் கூட்டம் நடத்துவதற்கு ஏற்றவாறு கலந்துரையாடல் அரங்கமும் அமைக்கப்பட்டது. தலைமைச் செயலகப் பணியாளர்களால் உற்சாகத்துடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த திறப்பு விழா நாளும் வந்தது. ஆனால், எதிர்பார்ப்புதான் நிறைவேறவில்லை. அப்போதைய அரசியல் சூழ்நிலையால் ஒருநாள் காலை நேரத்தில் எளிய நிகழ்ச்சியாகத் திறப்பு விழா நடந்தது ஏமாற்றம்தான். எனினும், கருணாநிதி பார்த்துப் பார்த்துக் கட்டிய நாமக்கல் கவிஞர் மாளிகை என்றென்றும் கருணாநிதியின் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும்.

- சொ.கந்தசாமி, ஓய்வுபெற்ற தலைமைச் செயலகப் பணியாளர், சென்னை.

விஜயகாந்த் - அறியாத தகவல்கள்

தலைவர் 11 - தகவலில் கேப்டன் விஜயகாந்த் பற்றிய அரிய தகவல்கள் மிகவும் ஆச்சரியப்படவைத்தன. தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் (கடனை அடைத்து ஒரு கோடி வங்கிசேமிப்பு), கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே 8.38% வாக்குகள் பெற்றது போன்ற பல குறிப்பிடத்தக்க சாதனைகள் படைத்துள்ளார் விஜயகாந்த். ராமாவரம் எம்ஜிஆர் பள்ளிக்குத் தொடர்ந்து உதவியதால், எம்ஜிஆரின் பிரச்சார வாகனத்தைப் பெற்றார் என்ற தகவல் இதுவரை அறிந்திராதது. கே.கே.மகேஷின் பணி தொடரட்டும்!

- சு.சிவகுமார், உதகை.

யதார்த்த வழி ஆன்மிகம்

ஆறுமுகத்தமிழனின் ஆன்மிகக் கட்டுரைகள் சிறப்பாக இருக்கின்றன. சித்தத்தையும் யோகத்தையும் வெகு சாதாரணமாக வேறுபடுத்தியுள்ளார். பொதுவாக, ஆன்மிகக் கட்டுரைகள் வாசிப்பை நான் விரும்புவதில்லை. ஆனால், இவரது எழுத்து யதார்த்த வாழ்வியலோடு ஒன்றியதைப் போலத் தோன்றுகிறது. எனக்குள் எதோ ஒன்றைச் செய்கிறது. சொர்க்கம், இம்மை, மறுமை என்றெல்லாம் நம்மால் உணர முடியாததைப் பற்றி எழுதாமல் சாத்தியமானவற்றை திருமூலர், மாணிக்க வாசகர்வழி சொல்வது சிறப்பு.

- என்.பகத்சிங், மதுரை.

விதி செய்வோம்.. உயிர் காப்போம்!

வாகன விபத்துகள் காரணமாகப் பலர் ஒவ்வொரு நாளும் மரணம் அடைகிறார்கள். மது அருந்தி வாகனம் ஒட்டுவதால் விபத்துகள் ஏற்படுவது அதிகமாகிவிட்டது. இவ்விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் தற்செயலானவை என்று கருதப்படுவதால் விதிக்கப்படும் தண்டனைகள் பெயரளவுக்கே இருக்கின்றன. மதுவருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கொலையென சட்ட மாற்றம் செய்தால், வாகன ஓட்டிகள் தண்டனைக்கு உட்படுவர். அதனால் ஏற்படும் அச்சம் அவர்களை வாகனத்தை ஓட்டும்போது விதிகளை மீறாது கவனத்துடன் செயல்படுவர்.. உயிரிழப்புகளும் குறையும்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

manushjpg100 

SCROLL FOR NEXT