மத மோதல்களினால் நாடு சந்தித்த அபாயத்தையும், நமது தேசப்பிதா மகாத்மா காந்தி வகுப்பு ஒற்றுமையை வலியுறுத்திச் சென்ற பயணங்களைப் பற்றியும் மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளது ராமச்சந்திர குஹாவின் கட்டுரை.
அன்று மதச்சார்பின்மையை தமது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு மகாத்மா காந்தியும், பண்டித ஜவாஹர்லால் நேருவும் அரும்பாடுபட்டு இந்த நாட்டில் அமைதி திரும்ப வழிவகுத்தனர். ஆனால், இன்றோ நாட்டில் பல பகுதிகளிலும் நிலவும் அசாதாரணமான சூழ்நிலை மக்களுக்கு அச்சமூட்டுகிறது.
1946-ல் இருந்த பரஸ்பர அவநம்பிக்கையும் அச்சமும் இப்போதும் நிலவுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதற்கு நமது அரசியல்வாதிகளே முழுப் பொறுப்பு. நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் மத மோதல்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. ராமச்சந்திர குஹா கூறியுள்ளபடி பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்களின் குழு உத்தரப் பிரதேசம் சென்றால் அங்கு சமூக அமைதியை மீட்க முடியும். அத்தகைய ஒற்றுமையை அவர்கள் காண்பிப்பார்களா என்பது ஒரு முக்கியமான கேள்வி.
-ஜா. அனந்தபத்மநாபன், திருச்சி.