‘திறனறித் தேர்வில் இத்தனை குழப்பம் ஏன்?’ தலையங்கம் படித்தேன். குடிமைப் பணிக்குத் தேர்வுசெய்யப்படும் இளைஞர்கள், அது சார்ந்த முன்னறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியம். குடிமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், நாட்டின் எந்த மாநிலத்திலும், பணிபுரிய வேண்டியிருக்கும் என்பதற்காக இந்தியாவின் அனைத்து மொழிகளையும் அறிந்திருக்க இயலுமா?
யு.பி.எஸ்.சி, போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவோ, அல்லது இன்ன பிற காரணங்களுக்காகவோ எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை போற்றும்படியாக இல்லை. திறனறித் தேர்வை அனைத்து மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் தருவதாக அமைக்கப்பட வேண்டும்.
மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருக்கும் குடிமைப் பணியாளர்களுக்கு, மொழி இன்றியமையாதது. எனவே, அவரவர் தாய்மொழிக்கு அதிக விழுக்காடு மதிப்பெண்கள் ஒதுக்குவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இதன் மூலம் தென்னிந்திய மாணவர்கள், குறிப்பாக தமிழக மாணவர்கள் தங்களது திறமையை வெளிக்கொணர ஏதுவாக இருக்கும்.
- மயில்சாமி, தமிழாசிரியர், கண்ணம்பாளையம்.