இப்படிக்கு இவர்கள்

ஜன்னல் இல்லாத வீடு

செய்திப்பிரிவு

க.திருநாவுக்கரசு எழுதிய ‘ஆங்கிலமா, தமிழ் மொழியா?' கட்டுரை படித்தேன். குடிமைப் பணித் தேர்வில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ‘சி.எஸ்.ஏ.டி' தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருப்பதால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது கட்டுரை. அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் ஒன்றே இந்தி. இந்தி தேசிய மொழியாகக் கூறப்பட்டாலும் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை.

அப்படியிருக்க, ஆங்கிலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அந்தந்த மாநில மொழிகளில் வினாத்தாள் இருப்பதே சரியானதாக இருக்க முடியும். ஆங்கிலத்தைத் தவிர்ப்பது தேவையில்லாத ஒன்று. இந்தியை அதிக அளவிலான மக்கள் பேசியபோதும், ஆளும் மத்திய அரசுகள் இந்தியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியபோதும் உயர் கல்வியின் அனைத்துத் துறை சார்ந்த புத்தகங்களும், ஆய்விதழ்களும் போதுமான அளவுக்கு வெளிவரவில்லை என்பது வேதனையான செய்தி.

பலமொழி கற்பது நமக்குப் பலனளிக்கும் என்றாலும், தாய்மொழியைத் தவிர்ப்பது தடுமாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு துறை சார்ந்த சொற்களை ஆங்கிலத்தில் படிப்பதற்கும் தாய்மொழியில் படிப்பதற்கும் புரிதலில் மிகப் பெரிய வேறுபாடு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. அதே வேளையில், ஆங்கிலத்தைப் புறக்கணிப்பது, கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோல் வாசல், ஜன்னல் இல்லாத வீடாக மாறிவிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

SCROLL FOR NEXT